தென் மாநிலங்களுக்கு 'ஐபி' எச்சரிக்கை-உஷார் நிலையில் தமிழகம்
சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையயடுத்து அவர்களது சதித் திட்டத்தை முறியடிக்க கண்காணிப்பும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கும்பல் மும்பை ஸ்டைலில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரிகளில் தனித்தனி குழுக்களாக பிரிந்து மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களின் டிஜிபிக்களுக்கு மத்திய உளவுப் பிரிவான ஐபி எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
இந்த 10 தீவிரவாதிகளுக்கும் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே 10 தீவிரவாதிகளும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதலில் ஹைதரபாப் வந்திறங்கலாம் என்று எச்சரிக்கை தரப்பட்டதால் ஆந்திர போலீசார் டெல்லியில் இருந்து வந்த ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலை காஜிபேட்டா ரயில் நிலையத்தில் நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கு இடமான 13 பேர் பிடிபட்டனர். எனினும் அவர்களிடம் ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை.
அதேபோல கான்பூரில் இருந்து ஹைதராபாத் வந்த தக்ஷிண் எக்ஸ்பிரஸ் ரயிலும் வாரங்கல் நிலையத்தில் நிறுத்தி சோதனையிடப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கிடமான 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 12 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
இதையடுத்து ஆந்திராவில் பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் சென்டர்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றிலும் வாடகைக்கு வீடு கேட்டு வருவோர் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பிரசாத ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் பலத்த பாதுகாப்பு:
தமிழ்நாட்டிலும் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை உட்பட முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோயில்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில் போன்ற முக்கிய கோயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உஷார் நிலையில் போலீசார்- கமிஷனர்:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், சென்னை நகருக்கென குறிப்பாக பயங்கரவாத அச்சுறுத்தல் ஏதுமில்லை, அதே சமயம் எதையும் சமாளிக்க போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக தென்னிந்தியாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது என்று எச்சரிக்கை வந்துள்ளது.
இதனால் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்படுகின்றன. சோதனைக்குப் பின்னரே அந்த வாகனங்கள் சென்னைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் குறித்து போலீசார் விவரங்களை திரட்டி வருகின்றனர் என்றார்.
டெல்லியில் லஷ்கர் தீவிரவாதி கைது:
இதற்கிடையே நிலையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகம்மது உமர் மதானி (50) டெல்லியில் பிடிபட்டார்.
இந்தியா மற்றும் நேபாள பகுதியில் நீண்ட நாள்களாக பல்வேறு தீவிரவாத செயல்களை முன்னின்று நடத்தியவர் இவர். டெல்லியில் அவர் பதுங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தெற்கு டெல்லியில் குதுப்மினார் அருகே ஒரு வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார். இவர் நேபாளம் வழியாக இந்தியா வந்ததாகக் கூறியுள்ளார்.
இவன் சமீபத்தில் பாகிஸ்தானில் விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சையீதின் கூட்டாளி என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பெங்களூரில் அஸ்ஸாம் தீவிரவாதி கைது:
இதற்கிடையே பெங்களூரில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவனை அஸ்ஸாம் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர் பன்னரகட்டாவில் பதுங்யிருந்த அந்த நபர் குறித்து அஸ்ஸாம் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அங்கிருந்து ஒரு படை கர்நாடகம் வந்தது.
அந்தப் படையும் பெங்களூர் போலீசாரும் இணைந்து அந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டு தீவிரவாதியை கைது செய்தனர். தீவிரவாதியின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications