எங்களை அதிகாரம் செய்ய நீங்கள் யார்? - இந்தியாவுக்கு இலங்கை கேள்வி!!

இலங்கை விரைவில் இந்தியாவுக்கு தன் சுய ரூபத்தைக் காட்டும் என்றே நடுநிலையாளர்கள் சொல்லி வந்தனர். ஆனால் இத்தனை சீக்கிரம் அது நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.
விடுதலைப்புலிகளை உருவாக்கி அவர்களை சர்வ பலம் பொருந்தியவர்களாக மாற்றுவதன் மூலம் இலங்கையை தனது காலடியில் அடிமையாக்க முயன்றது இந்தியா. நிலவைக் கூட இந்தியாவுடன் இணைத்து விடலாம்... ஆனால் இலங்கையை இணைக்கலாம் என்ற இந்தியாவின் கனவை தவிடுபொடியாக்கி விட்டோம், என அந்த தளம் சிறப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையை எழுதியிருப்பவர் பெயர் எல் ஜெயசூர்யா. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இந்த ஜெயசூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்கே தருகிறோம்...
“இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் சம உரிமையும் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை போக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் லட்சணம் என்னவென்பதை உணராமல் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் யார் எங்களை அதிகாரம் செய்ய?
கிருஷ்ணாவிடம் நாங்கள் கேட்பதெல்லாம், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான இலங்கைக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பதும் தெரியும்.
உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள். உண்மையிலேயே தேவையிருந்தால் கூட இங்கே மூக்கை நுழைக்கும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள்.
இத்தனை நாட்கள் இலங்கைக்கு எதிராகப் பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு மரியாதை.
இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம்.
இந்தியாவிற்கு மேலும் சில விஷயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் வழங்குவதாக இல்லை. ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.
அது மட்டுமின்றி இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை விரைவில் செல்லாததாக்கப்பட்டு தூக்கி வீசப்படும். அதன் மூலம் இலங்கையில் உள்ள இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் நாங்கள் துடைத்தெறிவோம். உங்கள் உடன்பாட்டுக்கு நாங்கள் ஏன் தலையாட்ட வேண்டும்!
விடுதலைப் புலிகளை உருவாக்கியது இந்தியாதான்!
இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எங்களுக்கு எதிராக வாக்களிக்காததற்காக இந்தியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவின் இந்த முடிவுக்கு மென்மையாக பேசும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் புத்திசாலித்தனம் தான் காரணம்.
அமெரிக்காவுக்கு ஓடியிருக்கும் இந்தியா...
இந்தியாவில் உள்ள பலர் எங்களுக்கு எதிராக வாக்களிப்பதையே விரும்பியிருப்பார்கள். அவ்வாறு இந்தியா வாக்களித்திருந்தால் ஆசியாவில் அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் நிலப் பகுதியில் அண்டை நாடுகளுடன் சேர்ந்து இருப்பது இந்தியாவிற்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும்.
அத்தகைய சூழலில் இந்தியா அமெரிக்காவிற்கு அருகில் இடம்பெயர்ந்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும். அப்போது அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.
இதையெல்லாம் அறிந்துதான் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்த ஜப்பான் நாடு கடைசி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது.. என்று வாய்க்கு வந்தபடி எழுதித் தள்ளியுள்ளார் ஜெயசூர்யா.












Click it and Unblock the Notifications