For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓடிப் போன ராணுவத்தினர்-இலங்கை பொது மன்னிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Sri Lanka Army
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப் போன ராணுவ வீரர்களுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பு அளித்துள்ளது.

முதல் கட்டமாக ஓடிப் போய் திரும்பி கைதான ராணுவ வீரர்கள் 585 பேருக்கு அதிபர் ராஜபக்சே பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இந்த பொது மன்னிப்பு, ஒரு வருட காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு பொருந்தும்.

இலங்கைக்கு புத்த மதம் அறிமுகமானதன் 2500வது ஆண்டு விழாவையொட்டி கொழும்பில் நடந்த நிகழ்ச்சியின்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் ராஜபக்சே.

பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட ராணுவத்தினர் கொழும்பு மற்றும் பல்வேறு சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புலிகளுக்கு எதிரான ஆரம்ப காலப் போரின்போது ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், புலிகளை எதிர்த்து நிற்க முடியாமல் ராணுவத்தை விட்டு ஓடிப் போனார்கள். பல ஆண்டுகளாக இவர்கள் தலைமறைவாகவே இருந்து வந்தனர்.

இருப்பினும் பன்னாட்டு ராணுவ உதவியுடன் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அரசு நடத்தி வந்த போரின்போது ராணுவத்தினர் யாரும் ஓடிப் போகவில்லை.

பார்க்கலாம், ஆனால் எழுதக் கூடாது..!

இதற்கிடையே இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கியுள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிடலாம் என பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் அங்கு பார்ப்பவை குறித்து அப்படியே எழுதக் கூடாது எனவும் மறைமுகமாக எடிட்டர்களை அவர் எச்சரித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்து அரசு அமைத்துள்ள இரும்புக் கம்பியால் சூழப்பட்ட மாட்டுக் கொட்டகை போன்ற முகாம்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கியுள்ளனர்.

இவர்களைப் பார்ப்பதற்கு மனித உரிமை அமைப்பினர், ஐ.நா. குழுவினர், பத்திரிக்கையாளர்கள் என யாரையும் அனுமதிக்காமல் இருட்டறையில் அங்கு நடப்பவற்றை மூடி வைத்துள்ளது இலங்கை அரசு.

இதுகுறித்து உலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தபோதிலும் அதை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த பத்திரிக்கை ஆசிரியர்களை முகாம்களுக்கு வந்து பார்வையிடலாம் என ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

அதேசமயம் அங்கு பார்ப்பவற்றை எழுதக் கூடாது எனவும் மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிக்கை நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் அடங்கிய கூட்டத்தில் ராஜபக்சே பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், போர் காரணமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி பொதுமக்களை பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படும்.

அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை பத்திரிகைகளின் ஆசிரியர்கள் நேரில் சென்று பார்வையிடலாம்.

அதேசமயம், இனங்களுக்கு இடையே துவேஷம், மோதல், விஷம எண்ணத்தைத் தூண்டும் வகையிலான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. அப்படிச் செய்வதின் மூலம் மேலும் ஒரு தீவிரவாத இயக்கம் தோன்றுவதற்கு வழி வகுத்து விடக் கூடாது.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் ஊடகங்கள் நடந்து கொள்ளக் கூடாது. விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து புதிய உதயம் நாட்டில் தோன்றியுள்ளது. தாயகத்தை ஒருமைப்பாட்டுடன் கட்டியெழுப்பும் நேரம் இது.

எனவே, சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் எழுதவோ, செய்திகள் ஒளிபரப்பவோ கூடாது என்று ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு சிறிய பொறி கூட பெரும் தீயை ஏற்படுத்தி விடும். எனவே ஊடகங்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளைத் தீர்த்துக் கொள்வதற்கு, யாரையும் அவதூறாகவோ, குறை கூறியோ ஊடகங்கள் செய்திகள் வெளியிடக் கூடாது என்று கூறினார் ராஜபக்சே.

யாரையும் அனுமதிப்பதில்லை என்ற உலக சமுதாயத்தின் நெருக்குதலிலிருந்து தப்பிப்பதற்காகவே மீடியாக்களை அதுவும் இலங்கை மீடியாக்களை மட்டும் அகதிகள் முகாம்களை நேரில் சென்று பார்வையிட இலங்கை அரசு அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேசமயம், அங்கு பார்ப்பவற்றை எழுதக் கூடாது என்ற மறைமுக எச்சரிக்கையையும் ராஜபக்சே விடுத்திருப்பதாகவே கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X