வைகோ மீது அவதூறு வழக்கு-திமுக தொடர்ந்தது

எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சேது மாதவன் முன் நேரில் இன்று ஆஜராகி இது தொடர்பான மனுவை தாக்கல் செய்தார் வீராசாமி.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் மே 30ம் தேதி பொதுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய வைகோ, அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக முதலமைச்சருக்கு தெரிந்தே நடந்தவை என்று பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
வைகோவின் இந்தப் பேச்சு முதல்வர் கருணாநிதியின் நற்பெயருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் களங்கம் உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது. வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் பொதுமக்கள் மத்தியில் முதல்வருக்கு உள்ள மரியாதைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.
வைகோவின் இந்த பேச்சு இந்திய தண்டனைச்சட்டம் 499, 500 பிரிவின் கீழ் அவதூறு சட்டத்தின் கீழ் குற்றமாகும். மேலும் இது குறித்து ஜூன் 1ம் தேதி முதலமைச்சர் சார்பில் வைகோவிற்கே வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை பெற்று கொண்ட அவர் அவதூறாக பேசியதற்காக எந்த மன்னிப்பும் கேட்கவில்லை. அதற்காக எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.
அவ்வாறு அவர் பேசியதாக ஏற்று கொண்டு ஜூன் 3ம் தேதி கருணாநிதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கருணாநிதிக்கு எதிராக தெரிந்தே வைகோ பேசியுள்ளார். எனவே, அவதூறு சட்டத்தின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் ஆற்காடு வீராசாமி கோர்ட்டில் ஆஜராகி பிரதான வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த விஷயத்தில் உயிரே போனாலும் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று வைகோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
