தென்காசி தோல்வி-திமுக தொண்டர்கள் அடிதடி
சங்கரன்கோவில்: தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளப்பாண்டி தோற்றது குறித்து கட்சி மேலிடப் பிரதிநிதி விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அவரது முன்னிலையிலேயே திமுகவினர் அடித்து உருண்டனர்.
தென் மாவட்டங்களில் மு.க.அழகிரியின் கண்காணிப்பில்கீழ் ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 9ல் கதவிசாரணை செய்ய திமுக தலைமை நிலையச் செயலாளர் சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தென்காசி தொகுதியிலுள்ள புளியங்குடி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதி நிலவரம் குறித்து அங்குள்ள பயணியர் விடுதியில் கட்சியினரிடம் விசாரணை நடத்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, நகரச் செயலாளர் பரம பால்பாண்டியன், சங்கரன்கோவில் ஒன்றியச் செயலாளர் லாலா சங்கரபாண்டியன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குருவிக்குளம் ஒன்றியம் தொடர்பான விசாரணையில் ஒன்றியச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்ட ராஜதுரை, ஒன்றியச் செயலாளர் கடற்கரை மீது சராமரியாக குற்றச்சாட்டுகளை கூறியதாகத் தெரிகிறது. அப்போது கடற்கரையுடன் நடந்த விவாதத்தை செல்போனில் பதிவு செய்து தலைமை நிலைய செயலாளர் சதாசிவம் முன்பாக ராஜதுரை போட்டு காட்டியதாக கூறப்படுகிறது.
சுமார் 30 நிமிடங்கள் நடக்கும் உரையாடல் தொடர்பாக ஒன்றிய செயலாளர் கடற்கரைக்கும், ராஜதுரைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் அடித்து உருண்டனர்.
இரு தரப்பினரும் சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அடித்தக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து விசாரணை அறையை விட்டு ராஜதுரை வெளியே வந்தார். அப்போது அவரது ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் தங்கவேலுவின் கார் கண்ணாடியை கைகளால் அடித்தார். இன்னொருவர் கார் மீது கல்லை தூக்கி போட்டார்.
அப்போது வெளியே வந்த சதாசிவம் அந்தக் காரில் ஏறிக் கிளம்பினார். ஆனால், காரை சில திமுக தொண்டர்கள் வழிமறித்தனர்.
இதைத் தொடர்ந்து காரை விட்டு இறங்கிய சதாசிவம் கடுமையாக எச்சரித்ததைத் தொடர்ந்து மறித்தவர்கள் விலகிச் சென்றனர்.
ஆளும்கட்சியினரின் இந்த அடிதடியால் அப் பகுதியே பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications