வானில் சிதறி கடலில் விழுந்தது ஏர் பிரான்ஸ் விமானம்
பாரிஸ்: அட்லாண்டிக் கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானம் வானிலேயே வெடித்துச் சிதறித் தான் கடலில் விழுந்திருக்க வேண்டும் என தடயவியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து கடலில் சிதறிக் கிடந்த உடல்களில் உள்ள காயங்களை சோதனையிட்டதன்
அடிப்படையில் இந்தக் கருத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1ம் தேதி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரிலிருந்து பாரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த அந்த விமானம் காணாமல் போனது.
ஒரு வார தேடலுக்குப் பின்னர் தான் அந்த விமானம் விபத்துள்ளாகி அட்லாண்டிக் கடலில் சிதறிக் கிடப்பது உறுதியானது.
இதையடுத்து விமான பாகங்களையும் உடல்களையும் மீட்கும் பணியில் பிரான்ஸ், பிரேசில் நாட்டு விமானப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடற்படைக் கப்பல்கள், நீர் மூழ்கிகள் ஈடுபட்டுள்ளன.
இதுவரை 50 உடல்களும் விமானத்தின் பல சிதறிய பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உதவும் கருப்புப் பெட்டி இன்னும் கிடைக்கவில்லை.
இதை பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல்களும், கடலடி ரோபோட்களும் தேடி வருகி்ன்றன.
இந் நிலையில் மீட்கப்பட்ட உடல்களைப் பரிசோதித்த டாக்டர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அந்த உடல்களில் விமானம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட காயங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
விமானம் கடலில் விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் தவிர, வானிலேயே வெடித்துச் சிதறினால ஏற்படும் காயங்களும் அந்த உடல்களில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பல உடல்களி்ல் கை, கால், இடுப்பு எலும்புகள் முறிந்துள்ளன. மேலும் உடல்களும் விமான பாகங்களும் அட்லாண்டிக் கடலில் 50 கி.மீ. சுற்றளவில் பரவிக் கிடப்பதால் அவை வானிலிருந்தே சிதறியிருக்க வேண்டும் என்றும் தெரியவந்துள்ளது.
கடலில் நேரடியாக மோதி வெடித்திருந்தால் இவ்வளவு தூர சுற்றவுக்கு உடல்களும் பாகங்களும் சிதறியிருக்காது என்றும் மேலும் உடல்கள் இவ்வளவு முழுமையாகக் கிடைத்திருக்காது என்றும் தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதனால் விமானம் கடலில் விழுந்து சிதறவில்லை என்பதும், வானிலேயே சிதறித் தான் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
அதே நேரத்தில் விமானம் குண்டு வெடிப்பால் அது சிதறவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. எந்த உடலிலும் குண்டு வெடிப்பால் ஏற்படும் தீக் காயங்கள் இல்லை.
இதனால் விமானம் பறக்கும்போதே சேதமடைந்து உடைந்து சிதறியிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், ஏன சிதறியது, எப்படி சிதறியது என்பதை அறிய கருப்பப் பெட்டி கிடைத்தால் தான் உறுதியாகச் சொல்ல முடியும்.












Click it and Unblock the Notifications