என்எல்சி பங்கு விற்பனை:நாளை பாமக போராட்டம்-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முயலும் காங்கிரஸ் அரசின் முடிவை எதிர்த்து பாமக சார்பில் நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது என்பதை போல் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்ற முடிவை மீண்டும் நிறைவேற்றி முடிக்க காங்கிரஸ் கூட்டணி அரசு தயாராகி விட்டது.

இதை தொடர்ந்து தமிழ்நாட்டின் பெரிய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில்லை என்று அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்குமிடையே உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னரே நெய்வேலி நிறுவனத்தின் 6.5 சதவீத பங்குகள் பங்குச்சந்தை மூலம் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கிறது.

மேலும் 10 சதவீத பங்குகளை விற்பது என்று கடந்த 2006ம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டபோது, தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக அந்த முடிவை அப்போதைய மத்திய அரசு கைவிட்டது.

இப்போது மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றி, நிறுத்தி வைக்கப்பட்ட இதுபோன்ற முடிவுகளையெல்லாம் நிறைவேற்றி முடிப்பதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்று தவறாக புரிந்துகொண்டு வாக்குறுதிகளை மீறி லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்பனை செய்யும் முடிவை வேக வேகமாக நிறைவேற்றிட மத்திய அரசு துணிந்திருக்கிறது.

நெய்வேலி நிறுவனத்திற்கு தங்களது நிலங்களை வழங்கியவர்களுக்கு நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், அதன் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் நிர்வாகத்தில் தனியாரை நுழைய விடுவது பொது நலனுக்கும், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக்கும் விரோதமானதாகும்.

திமுகவை நம்பி பலன் இல்லை...

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸ் கோபித்துக்கொள்ளும் என்று கருதும் திமுக அரசை இனி நம்பி பயனில்லை. மக்களை திரட்டிப் போராடினால் மட்டுமே நெய்வேலி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளுக்கு பணம் தேவைதான். அதற்கு லாபத்தில் ஒரு பங்கை பயன்படுத்தி கொள்ள வேண்டுமே தவிர, லாபம் ஈட்டும் நிறுவனத்தில் தனியாருக்கு பங்களிப்பது என்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இந்த முடிவை எதிர்த்தும், அதனைக் கைவிட வலியுறுத்தியும் பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் நாளை 22ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நான் பங்கேற்பேன்.

24ம் தேதி நெய்வேலியில் போராட்டம்...

அதனைத் தொடர்ந்து 24ம் தேதி நெய்வேலி நகரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும். இதையடுத்து கடலூர் மாவட்ட மக்களையும், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களையும் திரட்டி பாமகவும், பாட்டாளி தொழிற்சங்கமும் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தும்.

நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரையில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+