தேர்தல் தோல்வியை விட புலிகள் தோற்றதே கவலையாக உள்ளது: வைகோ
சேலம்: நாங்கள் லோக்சபா தேர்தலில் தோற்று விட்டோம் என்பதற்காக வருத்தப்படவில்லை. அதை விட முக்கியமாக, விடுதலைப் புலிகள் தோற்று விட்டார்களே என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் வைகோ பேசுகையில், மதிமுகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. வை அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க 50 கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கெளரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம்.
நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைதான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். புலிகளை யாராலும் அழிக்க முடியாது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications