ஊராட்சி தலைவர் கொலையில் திருப்பம்: கொன்றது மனைவி-கள்ளக் காதலன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மருசூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (42). இவரது வீட்டில் நேற்று முன் தினம் இரவு 3 முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.
அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் உடல் கருகி இறந்து கிடந்தார். அவரை யாரோ வெடிகுண்டுகளை வீசிக் கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி செந்தாமரை அழுது கொண்டிருந்தார்.
ஆனால், போலீஸ் விசாரணையில் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. சாதாரண பட்டாசுகளே வெடித்தது தெரியவந்தது.
மேலும் சுந்தரமூர்த்தியின் உடல், படுக்கை, தலையணை, உடைகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய் வாசம் வீசியது. இதனால் அவர் பெட்ரோல்-மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்யப்படதும், அதை திசை திருப்புவதற்காக பட்டாசுகளை வெடிக்கச் செய்ததும் தெரியவந்தது.
போலீசாரின் சந்தேகப் பார்வை சுந்தரமூர்த்தியின் மனைவி செந்தாமரை மீது விழுந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை எரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
செந்தாமரைக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த மதி (27) என்ற வாலிபருக்கும் கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது. இது சுந்தரமூர்த்திக்கு தெரிய வந்ததும் மனைவியை கண்டித்தார்.
இதையடுத்து செந்தாமரையும், மதியும் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். இதற்காக பெட்ரோல், மண்ணெண்ணை, வெடிகளை வாங்கி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு சுந்தரமூர்த்தி 11 மணிக்கு வீட்டுக்கு வந்து தூங்கினார். அவர் தூங்கிய பி்ன் பெட்ரோல், மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி செந்தாமரையும் மதியும் தீ வைத்தனர்.
தீப் பிடித்தவுடன் பட்டாசுகளை அவர் மீது வீசினர். இதனால் குண்டு வெடித்தது போல சத்தம் எழுந்தது. சுந்தரமூர்த்தி அந்த இடத்திலேயே கருகி பலியானார்.
இதையடுத்து மதி தனது வீட்டு்க்குள் சென்றிவிட, தனது கணவரை வெடிகுண்டு வீசி யாரோ கொலை செய்துவிட்டதாக செந்தாமரை புலம்பி அப் பகுதியினரை ஏமாற்றினார்.
இதை செந்தாமரை வாக்குமூலமாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து செந்தாமரையையும், மதியையும் போலீசார் கைது செய்தனர்.
சுந்தரமூர்த்திக்கு சுவாதி (12) என்ற மகளும், அருண்குமார் (9) என்ற மகனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications