ரங்கசாமி மீது காங். மேலிடம் நடவடிக்கை-நாராயணசாமி
புதுச்சேரி: எனக்காக பிரசாரம் செய்யும்படி 3 முறை வலியுறுத்தி அழைத்தும் வராமல் சேலம் போய் விட்டார் ரங்கசாமி. அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து புதுச்சேரியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
புதுச்சேரி விமானதளத்தில் இருந்து 50 பேர் செல்லக்கூடிய விமானத்தை இயக்க முடியும். ஆனால் 150 பேர் பயணம் செய்யும் பெரிய விமானத்தை இயக்க கூடுதலாக ஆயிரம் மீட்டர் ஓடுதளம் தேவைப்படுகிறது. இதற்கு மத்திய அரசிடம் நிதியும், தமிழக அரசிடம் நிலமும் கேட்டுள்ளோம்.
புதுச்சேரியில் மேல் சபை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பேசி முடிவு செய்வார்கள்.
முன்னாள் முதல்வர் ரங்கசாமி 8 ஆண்டுகள் அமைச்சராகவும், 7 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார். ஆனால் அவர் கட்சிக்கு பணியாற்ற தவறி விட்டார்.
நாடாளுமன்ற தேர்தலின் போது அவரை தொடர்ந்து 3 முறை சந்தித்து பிரசாரம் செய்யும் படி கேட்டுக் கொண்டேன். கடைசி நாளில் அவர் பிரசாரம் செய்ய வருவதாக கூறினார். ஆனால் முந்தைய நாள் இரவே சேலத்திற்கு சென்று விட்டார். அவர் மீது கட்சியின் தலைமையகத்தில் புகார் செய்துள்ளேன்.
அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என்பதால் அவர் மீதான நடவடிக்கைகளை கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். மற்றவர்கள் மீதான நடவடிக்கையை மாநில தலைமையகம் முடிவு செய்யும்.
வணங்காமண்-மன்மோகனுக்கு கடிதம்...
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பிய உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றி வந்த கப்பலை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் குறித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினேன்.
அப்போது, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பியுள்ள நிவாரண பொருட்கள் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், அதோடு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கும் அதிகார பகிர்வுக்கும் இலங்கை அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு நிர்பந்திக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் என்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications