மாவோயிஸ்ட்-சென்னை பெண் கைதாகி விடுதலை
சென்னை: மேற்கு வங்க மாநிலம் லால்கருக்கு செல்ல முயன்றபோது அங்குள்ள போலீஸாரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்க ஆதரவாளர் பத்மா பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால்கர், ராம்கர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை மாவோயிஸ்டுகள் பிடித்துக் கொண்டனர்.
இவற்றை துணை ராணுவப்படை படிப்படியாக மீட்டு வருகிறது. லால்கர், ராம்கர் ஆகியவை தற்போது போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், மாவோயிஸ்ட் விவகாரத்தில் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக டெல்லியைச் சேர்ந்த சில மனித உரிமை அமைப்புகள் இணைந்து உண்மை கண்டறியும் குழுவை ஏற்படுத்தின.
பேராசிரியர் அமீத் பட்டாச்சார்யா தலைமையிலான இந்தக் குழு மேற்கு வங்கம் சென்றது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பத்மா என்பவரும் ஒருவர்.
ஆனால் இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். பின்னர் கொல்கத்தாவுக்குக் கொண்டு வந்து ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றனர்.
கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பத்மாவின் பூர்வீகம் ஆந்திரா. பெற்றோர் ஹைதராபாத்தில் உள்ளனர். ஆனால் பத்மா மட்டும் சென்னையில் வசிக்கிறார்.
புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளராக உள்ள இவர் மீது பொடா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. 2002ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் நக்சலைட்டுகள் அசம்பாவித சம்பவங்களை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து 26 பேரை கைது செய்தனர். அதில் பத்மாவும் ஒருவர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மேற்கு வங்க நிலவரம் குறித்து பத்மா கூறுகையில், மேற்கு வங்காள மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் நிலங்களை வசதிபடைத்தவர்கள் ஆக்கிரமித்ததால்தான் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்படுவது போல, மேற்கு வங்காளத்திலும் ஆதிவாசிகள் கொடுமைக்குள்ளாகியுள்ளனர். ஆதிவாசி பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் நடப்பது போல மேற்கு வங்காளத்திலும் நடப்பதாக தகவல் வந்ததால் உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டறிய 8 பேர் கொண்ட குழுவினர் சென்றோம்.
மிதினாப்பூரில் நாங்கள் போய் சேர்ந்தவுடன் போலீசார் எங்களை பிடித்துவிட்டனர். அங்கு 144 தடை உத்தரவு இருப்பதாக பொய்யான தகவல்களை சொல்லி எங்களை பிடித்து சென்றனர்.
பத்வானி போலீஸ் நிலையத்தில் வைத்து எங்களிடம் விசாரணை நடத்தினார்கள். மாலை 3.15 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை எங்களை போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்தனர். எங்கள் மீது வழக்கு பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்று நாங்கள் கேட்டோம்.
இதற்கு போலீசார் எந்தவித பதிலும் பேசவில்லை. பின்னர், வழக்கு எதுவும் போடாமல் விடுவித்துவிட்டனர். ராணுவ வேனில் எங்களை ஏற்றி கொல்கத்தாவில் கொண்டு வந்து விட்டனர்.
பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று எங்களுக்கு கண்டிஷன் போட்டனர். நாங்கள் இந்த பிரச்சினையை இத்தோடு விடமாட்டோம். மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய எங்களை அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையில் விரைவில் ஈடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications