எம்பிபிஎஸ் சேர்க்கை-ரேங்க் பட்டியல் வெளியீடு
சென்னை: எம்பிபிஎஸ், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 14,167 மாணவர்களுக்கு இன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திகா சங்கர் தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். 2 மாணவிகள் உள்பட 8 பேர் 200க்கு 200 பெற்றுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இந்த ரேங்க் பட்டியல் ஒட்டப்படுள்ளது.
மேலும் சுகாதாரத் துறையின் www.tnhealth.org இணையத் தளத்திலும் ரேங்க் பட்டியலைக் காணலாம்.
சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை, தர்மபுரி உள்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உள்பட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 283 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
6ம் தேதி முதல் கவுன்சலிங்:
இதற்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 6ம் தேதி முதல் நடக்கும்.
தர்மபுரி அரசு கல்லூரி நிலை:
கடந்த ஆண்டு 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்கப்பட்ட தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அங்கு நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து குறைபாடுகளைச் சரி செய்து மாணவர்களைச் சேர்க்க உரிய அனுமதியைப் பெற மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
அங்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தரப்பட்டால் மேலும் 100 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக இருக்கும்.
மருத்துவ உயர் படிப்பு தேர்வு ரத்து:
இதற்கிடையே சென்னையில் நேற்று நடத்தப்பட்ட மருத்துவ உயர் மருத்துவப் படிப்பு (டி.எம்., எம்.சிஎச்.) மாணவர் சேர்க்கை தேர்வு ரத்து செய்யப்பட்டது.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேர்வு தொடங்கிய 15 நிமிஷத்தில் ரத்து செய்யப்பட்டதால் வெளியூர்களிலிருந்து வந்திருந்த 600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர்.
இதையடுத்து ஜூலை இறுதி வாரத்தில் கம்ப்யூட்டர் அடிப்படையில் இல்லாமல், வழக்கமான எழுத்து முறையிலேயே தேர்வு நடத்தப்படும்'' என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.
வேளாண் படிப்பு-பிசி இடங்கள் நிரப்பப்பட்டன:
இதற்கிடையே கோவை வேளாண் பல்கலைக்கழகம் வழங்கும் இளநிலைப் பட்டப் படிப்புகளில் பிற்பட்ட (பிசி), இதர வகுப்பு (ஓசி) மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுவிட்டன.
பி.டெக் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பாடப் பிரிவில் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டு இடம் மட்டுமே காலியாக உள்ளது.












Click it and Unblock the Notifications