பந்து என நினைத்து வெடிகுண்டை எடுத்து விளையாடிய 2 சிறுவர்கள் பலி
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிசை வீட்டில் கிடந்த குண்டை எடுத்து விளையாடிய இரு சிறுவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த வீட்டில் ஏராளமான குண்டுகள் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்து அதில் வசித்து வந்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த தவளகுப்பம் அருகே உள்ள கொருக்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் லாசர். இவரது மகன் ஆல்பர்ட் (10). இருதயராஜ் என்பவரின் மகன் அந்துவான் ராஜூ (10). இருவரும் 4ம் வகுப்பு படிக்கின்றனர்.
நேற்று அப்பகுதியில் உள்ள சகாயமேரி என்பவரின் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். இந்த நிலையில், காலை 11.15 மணியளவில் அந்த வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். குண்டு வெடிப்பில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. வீட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் அந்துவான் (10), இருகைகளும் துண்டான நிலையில், ரத்த வெள்ளத்தில் ரோட்டில் கிடந்தான். ஆல்பர்ட்(10), வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் படுகாயத்துடன் கிடந்தான். அவர்களை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறியழுதனர்.
படுகாயமடைந்த சிறுவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 சிறுவர்களும் உயிரிழந்தனர்.
சகாயமேரி வீட்டில் ஒரு பையில் நிறைய வெடிகுண்டுகள் இருந்துள்ளன. நூல் சுற்றிய நிலையில் இருந்த குண்டுகளை எடுத்த சிறுவர்கள், அது பந்து என நினைத்து, விளையாடியுள்ளனர்.
ஒரு குண்டை வீசிய போது, அது தரையில் பலமாக மோதி பயங்கரமாக வெடித்திருக்கிறது. வீட்டை சோதனையிட்ட வெடிகுண்டு நிபுணர்களும், போலீஸாரும் அங்கு பை நிறைய வெடிகுண்டுகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
அவை நாட்டு வெடிகுண்டா அல்லது சக்தி வாய்ந்த வெடிகுண்டா என்பது குறித்து சோதனை நடந்து வருகிறது.
உண்மையில் சகாயமேரி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம். அவரது வீட்டுக்கு ஏகப்பட்ட பேர் வருவதும், போவதும் வழக்கம் என்கிறார்கள். ரவுடிக் கும்பல் ஏதேனும் வ்நது அவரது வீட்டில் வெடிகுண்டுப் பையை விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
இந்த வெடிகுண்டுப் பையை வைத்துச் சென்ற கும்பலைப் பிடித்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
