ராணுவ தளமாகும் முல்லைத்தீவு: கன்னிவெடி-களமிறங்கும் இந்தியா
டெல்லி: இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கன்னிவெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்திய ராணுவ நிபுணர்கள் களமிறக்கப்படுவார்கள் என வெளியுறவு துறை செயலர் சிவ சங்கர மேனன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்து சுமார் இரண்டு மாதங்களாக போகும் நிலையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் திணறி வருகின்றனர்.
ஆடு, மாடுகளை போல் முள் வேலிக்குள் அடைத்து வைக்கப்ப்டடிருக்கும் இவர்களின் நலனுக்காக பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலை புலிகள் இறுதி கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான கன்னிவெடிகளை புதைத்து வைத்துள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது. இதைக் காரணம் காட்டி இடம் பெயர்ந்த தமிழர்களை அவர்களது ஊர்களுக்கு அனுப்பாமல் முகாம்களில் போட்டு அடைத்து வைத்திருக்கிறது.
இந்த கன்னிவெடிகளை அகற்றும் அளவுக்கோ, அதை பற்றிய அறிவோ இலங்கை ராணுவத்துக்கு கொஞ்சம் கூட இல்லை என்பதால் அவர்கள் இந்திய ராணுவத்தின் உதவியை கேட்டுள்ளனர்.
இதையடுத்து இப்பணிகளில் இந்திய ராணுவ நிபுணர்கள் ஈடுபடுவார்கள் என வெளியுறவு துறை செயலாளர் சிவ சங்கர மேனன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நாங்கள் இலங்கைக்கு நிபுணர்களையும், அதற்கான கருவிகளையும் அனுப்பி வைக்க இருக்கிறோம். இதில் ராணுவ நிபுணர்களும் அடங்குவார்கள் என்றார்.
மேனன் இந்த மாத கடைசியோடு ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ தளமாகும் முல்லைத்தீவு...
இதற்கிடையே தமிழர்களின் பகுதியான முல்லைத்தீவில் இடம் பெயர்ந்த மக்களை குடியமர்த்தாமல், அந்த நகரை ராணுவ தளமாக மாற்றி விட திட்டமிட்டுள்ளது இலங்கை அரசு.
அதற்குப் பதில் முல்லைத்தீவு மக்களை மாங்குளத்திற்கு மாற்றவுள்ளது.
விடுதலைப்புலிகள் முக்கிய முகாமாக இருந்தது முல்லைத்தீவு. விடுதலைப்புலிகள் தலைநகரமான கிளிநொச்சி வீழ்ந்ததற்கு பிறகு இந்த நகரத்தை ராணுவத்தினர் கைப்பற்றினர்.
இங்குள்ள மக்கள் அனைவரும் இப்போது அகதி முகாம்களில் உள்ளனர். முகாம்களில் இருப்பவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.
ஆனால் முல்லைத்தீவு மக்களை மட்டும் சொந்த ஊருக்கு அனுப்பும் திட்டம் அரசிடம் இல்லை. முல்லைத்தீவு நகரம் முழுவதையும் ராணுவ தளமாக மாற்ற உள்ளனர். எனவே அங்கு வசித்த மக்களை மாங்குளத்தில் குடியேற்ற திட்டமிட்டு உள்ளனர்.
முல்லைத்தீவில் சொந்த வீடு, சொத்துக்கள் என இருந்த மக்கள் அத்தனையும் இழந்து வேறு எங்கோ குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
முல்லைத்தீவு மக்கள் அனைவரும் தற்போது புல்மோட்டை அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை முல்லைத்தீவு மாவட்ட அரசு அதிகாரி மேரி இமல்டா சந்தித்து பேசினார். அப்போதுதான் அவர் இந்த தகவலை கூறி இருக்கிறார்.
3 மாதத்துக்கு அனைவரும் இந்த முகாமிலேயே இருங்கள். பின்னர் நாங்கள் உங்களை மாங்குளத்துக்கு அழைத்து செல்ல உள்ளோம் என்ற கூறி இருக்கிறார்.
முல்லைத்தீவு மட்டும் அல்லாமல் தமிழர்கள் வசித்து வந்த பாரம்பரியப் பகுதிகளைப் படிப்படியாக ராணுவ கேந்திரமாக மாற்றி, தமிழர்களை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுக்கும் பெரிய சதித் திட்டத்தில் இலங்கை அரசு இரு்பபதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications