திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம்...கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், 'இவன் தான் இளிச்சவாயன், இவனிடம் கேட்டால் தான் கிடைக்கும்' என்ற எண்ணத்தோடு போராட்டம நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதில்,

இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திலே பேசிய உறுப்பினர்கள் அனைவரும் சத்துணவு ஊழியர்கள் என்றால் நாள் முழுவதும் பணியாற்றுகின்றவர்கள் என்ற எண்ணத்தோடு பேசியிருப்பதாக அறிகிறேன். அவர்கள் பகுதி நேரப் பணியாளர்கள்தான் என்பதை மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும்.

சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டபோது அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் எவ்வளவு? இன்றைய தினம் வழங்கப்படுகின்ற சலுகைகள், ஊதியம் இவைகளெல்லாம் எவ்வளவு? என்பதை கேள்விப்படாமலேயே, படித்துப் பார்க்காமலேயே சில பேர் இன்றைக்கு போராட்டங்களை தொடங்கியிருக்கிறார்கள்.

இங்கு பேசிய உறுப்பினர்கள் அனைவரும் முழு விவரங்களைத் தெரிந்து தான் பேசினார்களா? இல்லையா? என்பது எனக்கு ஐயத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.

ஏனென்றால் இடைக் காலத்திலே சத்துணவு அமைப்பாளர்களுடைய சங்கங்கள், அமைப்புகள் இவைகளோடு தொடர்பு கொண்டு அவர்களுடைய நிர்வாகிகளையெல்லாம் அழைத்துப் பேசி, அவர்கள் மகிழ்ச்சி அடையத்தக்க வகையிலே அறிவிப்புகளைச் செய்து, அவர்கள் ஒரு மாநாடு நடத்தி என்னைப் பாராட்டுவதற்காகக் கூட தேதியெல்லாம் நிச்சயித்து இருந்தார்கள்.

நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய காரணத்தினால் அந்த நேரத்திலே அந்த மாநாடு நடத்தப்பட முடியாமல் போய்விட்டது. நடத்தியிருந்தால் உங்களில் சிலர் அங்கே வந்து, இந்த அரசு இந்த அளவிற்குக் கருணை காட்டி, இந்தப் பணியாளர்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காக நன்றியினைத் தெரிவித்திருப்பீர்கள்.

அது நடைபெறாத காரணத்தால் இன்றைக்கு அரசுக்கு சில அறிவுரைகளை சொல்லியிருக்கிறீர்கள். நான் அந்த அறிவுரைகளை அலட்சியப்படுத்தக்கூடியவன் அல்ல.

ஆனால், இந்தப் போராட்டம் எந்த அடிப்படையில் நடைபெறுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். உறுப்பினர்களே குறிப்பிட்டதைப்போல சற்றொப்ப இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பணியாளர்களைக் கொண்டுள்ளது சத்துணவு திட்டம்.

இந்தப் போராட்டத்திலே ஈடுபட்டிருப்போர்- நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை, விளையாட்டாகச் சொல்லவில்லை, திருத்திச் சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொல்லவில்லை, நீங்கள் ஒப்பிட்டு பார்த்தால்- ஆழமாக விசாரித்தால் புலப்படக்கூடிய உண்மை- ஐந்தாயிரம், ஆறாயிரம் பேர்தான் போர்க் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் என்னவொரு விநோதம் என்றால்- திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும்- இவன் தான் இளிச்சவாயன், இவனிடம் கேட்டால் தான் கிடைக்குமென்ற எண்ணத்தோடு போர்க்குரல் கொடுக்கின்ற மாவீரர்கள் பல அமைப்புகள் சார்பாகத் தோன்றி விடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் 41,663 பள்ளிச் சத்துணவு மையங்களும், 50,433 குழந்தைகள் மையங்களும் செயல்படுகின்றன. இவற்றில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் மொத்தம் 1,23,729 பேர் பணி புரிகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் மொத்தம் 97,698 பேர் பணி புரிகின்றனர்.

மொத்தமாகச் சேர்த்தால், 2,21,427 பேர் பணியாற்றுகின்றனர். நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல், இதில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே ஊதிய உயர்வு தரப்பட வேண்டுமென்று கேட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஊதிய உயர்வில் இந்த அரசு எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை சில புள்ளி விவரங்களின் மூலம் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். (அவர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் தரப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களை முதல்வர் விளக்கினார்)

அதன் பிறகு இடையிலே வந்த ஆட்சியில் (அதிமுக) எந்த ஊதிய உயர்வும் செய்யப்படவில்லை. அப்போது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. இப்போது குரல் தரும் செங்கோட்டையனும் குரல் எழுப்பவில்லை.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அதிகபட்ச ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (அவர்களுக்கான வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, ஓய்வூதியம், இடைநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு, பொங்கல் போனஸ், வாரிசுகளுக்கு வேலை, மருத்துவக் காப்பீடு திட்டங்கள் குறித்து விளக்கமாகக் கூறினார்)

நான் இவைகளையெல்லாம் விவரமாகச் சொல்லியிருக்கிறேன். இது சத்துணவு அமைப்பாளர்களுடைய, பணியாளர்களுடைய சங்கங்களுக்கோ அல்லது அமைப்பாளர்களுக்கோ தெரியாத விஷயமல்ல. இருந்தாலும் கிடைத்தவரை கிடைக்கட்டும், நடந்த வரை நடக்கட்டும் என்கிற அந்த ஒரு எண்ணத்தின் காரணமாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சில போராட்டங்கள், இன்றைக்குக்கூட ஏடுகளில் பார்த்தேன். நாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்றெல்லாம் சிலர் (மருத்துவ மாணவர்கள்) அறிவித்திருக்கிறார்கள். போட்டி உண்ணாவிரதம் இருக்க எனக்கும் தெரியும்.

ஆகவே இவ்வளவையும் பெற்றுக் கொண்ட பி்ன்னரும் அரசை பயமுறுத்தி போராட்டம் என்றால், பொது மக்களிடத்திலே அதற்கான ஆதரவைப் பெற முடியாது என்பதைத் தெரித்துக் கொள்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+