இறந்த மகனுக்காக விரலை வெட்டிய தந்தை
சேலம்: இறந்த மகனுக்காக தனது விரலை வெட்டி காணிக்கை கொடுத்துள்ளார் ஒரு தந்தை.
சேலம் மாவட்டம் ஓமலூர் அக்ரஹாரம் பை-பாஸ் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் இளங்கோ (15).
இவர் கரும்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவன் இளங்கோ அருகில்
உள்ள கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில், மாணவன் இளங்கோ சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டம் நடத்தியதால் மாணவனின் முக்கிய உடல் உறுப்புகளை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளந.
மாணவனின் பிணத்தை அவனது பெற்றோர் ஓமலூர் மேற்கு சரபங்கா நதிக்கரையோரம் புதைத்துள்ளனர்.
இந் நிலையில் அந்த மாணவனின் சமாதியில் 3-வது நாள் காரிய நிகழ்ச்சியின் போது, தேங்காய், பழம் வைத்து பூஜிக்கப்பட்டது.
அப்போது மாணவனின் தந்தை செந்தில்குமார் திடீரென்று கத்தியால் தனது இடது கை பெருவிரலை வெட்டி உனக்கு என் உயிரை கொடுக்க முடியவில்லை, என் விரலையாவது காணிக்கையாக கொடுக்கிறேன் என்று அந்த சமாதி முன்பு குழி தோண்டிப் புதைத்தார்.
அருகில் இருந்த அவரது உறவினர்கள் உடனே அவரது கை விரல் துண்டிக்கப்பட்ட பகுதியை துணியால் சுற்றி அவரை ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பெற்ற மகனுக்காக தனது விரலை வெட்டிக் கொடுத்த தந்தைய அந்த பகுதி மக்கள் வேதனையுடன் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications