'இலங்கை': இந்தியாவுக்கு முக்கிய பங்கு-யுஎஸ்
வாஷிங்டன்: இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணமாக கிளம்புவதற்கு முன்பு செனட் சபையின் வெளியுறவு விவகார கமிட்டி உறுப்பினர்களிடையே பேசினார் ஹில்லாரி.
அப்போது அவர் கூறுகையில், இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியாவுக்கு மிக முக்கிய, மிகப் பெரிய பங்கு உள்ளது. பிராந்தியப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், உலகளாவிய பிரச்சினைகளிலும் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
இவையெல்லாம் குறித்து நான் இந்தியப் பயணத்தின்போது இந்தியத் தலைவர்களுடன் விவாதிப்பேன்.
இந்தியாவுடன் மிகவும் விரிவா முறையில் ஆக்கப்பூர்வமான வகையில் எனது பேச்சுக்கள் அமையும்.
இந்தியா, அமெரிக்கா இடையே இதுவரை இல்லாத அளவு விரிவான முறையில் பேச்சுக்கள் அமையும் என்றார் ஹில்லாரி.
இன்று இந்தியா வரும் ஹிலாரி 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
ஐஎம்ப் கடன்-தொடரும் இழுபறி:
இதற்கிடையே இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதசே நாடுகள் எழுப்பும் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. இதனால் கடன் கிடைக்குமா என்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.
சர்வதேச நிதியத்திடம் இலங்கை 1.9 பில்லியன் டாலர் கடனுதவி கோரியுள்ளது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் காரணமாக கடனுதவியை அளி்ப்பதில் சர்வதேச நிதியம் தாமதித்து வருகிறது.
இந்த நிலையில், சர்வதேச நாடுகள் இதுதொடர்பாக தெரிவிக்கும் கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொள்வோம் என்று நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் கரோலின் அட்கின்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடன் உதவி தருவது குறித்து தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. சர்வதேச நாடுகளின் கருத்துக்களையும் நாங்கள் பரிசீலிப்போம் என்றார்.
ஏற்கனவே கடன் உதவி குறித்த பிரச்சினை நிலுவையில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை என்று இங்கிலாந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications