தமிழர்கள் மறுவாழ்வைப் பொறுத்துதான் இந்திய, இலங்கை உறவு- பிரதமர்

எகிப்து நாட்டுக்குச் சென்றிருந்த மன்மோகன் சிங் அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேசினார். அப்போது பேசப்பட்ட விவரங்கள் குறித்து பிரதமர் விளக்க வேண்டும் என்று இன்று ராஜ்யசபாவில் சிபிஐ உறுப்பினர் டி.ராஜா கோரினார்.
இதையடுத்து பிரதமர் அதற்குப் பதிலளித்தார். அப்போது பிரதமர் கூறுகையில், இடம் பெயர்ந்த தமிழர்களின் கவலைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டேன்.
இதைப் பொறுத்துதான் இந்திய, இலங்கை நாடுகளின் உறவு உள்ளது என்பதையும் அதிபர் ராஜபக்சேவிடம் விளக்கினேன்.
இலங்கை அதிபருடன் நான் இலங்கைத் தமிழர்களின் துயரம் குறித்துதான் அதிகம் பேசினேன். ஈழத் தமிழர்களின் நிலை குறித்து இந்தியா மிகுந்த கவலை அடைந்துள்ளது. அதை நான் ராஜபக்சேவிடம் தெரிவித்தேன்.
தமிழர்களின் நல்வாழ்வு குறித்து கவலைப்பட இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளது. அதில், இரு நாடுகளின் உறவும் தொக்கியுள்ளது என்பதையும் அவரிடம் விளக்கினேன்.
எனவே தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஆக்கப்பூர்வமாகவும், உறுதியாகவும், உண்மையாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை அதிபர் ராஜபக்சேவிடம் வலியுறுத்திக் கூறினேன் என்றார் பிரதமர்.
இவ்வாண்டு இறுதிக்குள்....
இந் நிலையி்ல் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் உயர் அதிகாரியான அம்சா நேற்று கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
நான் பதவி உயர்வு பெற்று லண்டன் செல்ல இருக்கிறேன். எனவே மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்துப் பேசினேன். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசும், கவர்னரும் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி.
இலங்கையில் போர் நெருக்கடி முடிந்துவிட்டது. 2.8 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.அவர்களுக்கு தேவையான உதவிகளை இலங்கை அரசு செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களை சொந்த வீடுகளில் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்திய அரசும், தமிழக அரசும் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதற்கு நன்றி என்றார்.












Click it and Unblock the Notifications