மிருகங்கள் போல நடத்தப்படும் தமிழர்கள்-வைகோ
சென்னை: இலங்கையில் மின்வேலி முகாம்களில் சிக்கியுள்ள தமிழர்கள் மிருகங்கள் போல நடத்தப்படுகின்றனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
இலங்கையில் ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசுகையில்,
இலங்கையில் மின்வேலியில் சிக்கி உள்ள தமிழர்கள் மிருகங்கள் போல நடத்தப்படுகின்றனர். சர்வதேச நாடுகளும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. அங்கு முளைக்கும் புல், பூண்டுகள் கூட இலங்கை ஆதிக்கத்தை ஏற்காது.
அங்கு தனிநாடு அமைக்க எல்லா உதவிகளையும் செய்வோம். நடைபெற்று வரும் விடுதலை போராட்டத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. இத்தனை பேரில் உயிர் பலி வீண்போகாது.
நம் தொப்புள் கொடி உறவுகளை காப்பதற்கு தன்மான உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் ஒருசேர குரல் கொடுப்போம் என்றார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பேசுகையில்,
இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உணவு, மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை.
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்பட்டு, சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்தியா வழங்கிய ரூ.500 கோடி உதவி தொகை மற்றும் ஏனைய நாடுகள் வழங்கிய உதவி தொகைகளைக் கொண்டு சிங்கள குடியிருப்புகள் கட்டப்படுகிறது.
இலங்கையில், சொந்த மண்ணில் நமது மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுமை நீங்க வேண்டும் என்றால், உடனே ஐ.நா. தலையிட்டு, 3 லட்சம் தமிழர்களை பாதுகாப்பதுடன் சொந்த ஊரில் குடியேற்ற வேண்டும்.
ஆனால், இந்திய அரசு உண்மையை உணராமல், இலங்கை தமிழர்களுக்கு சிங்கள அரசு மூலம் உதவ வேண்டும் என்கிறது. நம் முன் நிறைய பணிகள் இருக்கிறது. நாம் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications