கார்கில் போரின் 10ம் ஆண்டு தினம் - பிரதமர் அஞ்சலி

கார்கில் போரின் 10ம் ஆண்டு தினத்தை இன்று நாடு அனுஷ்டிக்கிறது. இதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார்.
அமர் ஜவான் ஜோதி நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் போர் வீரர் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்திலும் அவர் எழுதினார்.
அப்போது பிரதமர் கூறுகையில், கார்கில் போரில் நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளை நாட்டு மக்களோடு சேர்ந்து நானும் நினைவு கூருகிறேன். நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க தங்களது இன்னுயிரை ஈந்தவர்கள் கார்கில் தியாகிகள்.
தீரமிகு வீரர்கள், அதிகாரிகளின் தியாகத்திற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சமலி, நாட்டின் முன் உள்ள சவால்களை சந்தித்து அவற்றை வீழ்த்தி, நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு ஊறு ஏற்படாத வகையில் செயல்படுவதே ஆகும் என்றார் பிரதமர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தார், ராணுவ துணைத் தளபதி நோபல் தம்புராஜ், விமானப்படை துணைத் தளபதி பார்பரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கார்கில் போரின் நினைவு தினத்தையொட்டி கார்கில் - டிராஸ் பிரிவில் ராணுவம் பலவேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கார்கில் போரில் பங்கேற்ற அதிகாரிகள், வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
பாகிஸ்தானுடன் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது 533 வீரர்கள், அதிகாரிகள் உயிர்த்தியாகம் செய்தனர். பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்த 13 மலைப் பகுதிகளை இந்திய ராணுவம் மீட்டது.
இந்தப் போரின்போது இந்திய விமானப்படை 2 மிக் 27 ரக போர் விமானங்கள், ஒரு எம்ஐ 17 ஹெலிகாப்டரை இழந்தது.












Click it and Unblock the Notifications