அதிமுகவினர் இடைத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது -ஜெ. கட்டளை
கொடநாடு: சட்டசபை இடைத் தேர்தல் புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவினர் யாரும் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று கொடநாடு எஸ்டேட்டில் அதிமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை ஜெயலலிதா கூட்டியிருந்தார்.
அதன்படி அ.தி.மு.க.வின் 25 மாவட்ட செயலாளர்கள், 10 மாநில நிர்வாகிகள் நேற்று கொடநாடு எஸ்டேட் வந்தனர். அங்கு மாலை 2.45 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
ஜெயலலிதா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் விவாதித்தார் ஜெயலலிதா.
தொண்டர்கள் சுறு சுறுப்பாக செயல்பட வேண்டும் எனவும், கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் ஜெயலலிதா மாவட்டச் செயலாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், முக்கியமாக, 5 தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. போட்டியிடுவதில்லை என்ற புறக்கணிப்பு அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று கூட்டத்தில் அங்கீகரித்து முடிவு செய்யப்பட்டது.
மேலும், கட்சியினர் யாரும் இடைத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்றும் ஜெயலலிதா இக்கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
ஜெயலலிதா பேரவை கிளைகளை அதிக அளவில் தொடங்க வேண்டும், கிளைக்கழக தேர்தல்களை அடுத்த 5, 6 மாதங்களில் நடத்த வேண்டும், கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களையும் உற்சாக படுத்த வேண்டும், கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாக சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேச வேண்டும் என்று ஜெயலலிதா ஆலோசனை கூறியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications