கைதான புலிகளின் தலைவர்கள் ரகசிய படுகொலை?
கொழும்பு: இறுதிப் போரின் முடிவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை ரகசியமாக படுகொலை செய்துவிட்டதாக அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.
இச்செய்தியை சிறிலங்கா கார்டியன் எனும் இணையதளம் நேற்று வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகு, வவுனியாவுக்கு இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த தளம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுத் தரப்பிடமிருந்து மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்பகுதியில் உள்ள சிறைச்சாலைககளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட இவர்கள், அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 வரையிலான முக்கிய உறுப்பினர்கள் திட்டமிட்ட முறையில் வெளியே தெரியாமல் இலங்கை அரசு அமைத்துள்ள 'கொலைக் குழு" ஒன்றினால் கொன்று அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு இவர்கள் அனைவருமே படுகொலை செய்யப்பட்டுவிட்டார்களாம்.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த வே.பாலகுமார் (முன்னாள் ஈரோஸ் தலைவர்), யோகரட்ணம் யோகி, கரிகாலன், புலவர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் இருந்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக என இவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.
இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவோ அல்லது இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையிட்டோ அரசு தொடர்ந்தும் மெளனமாகவே இருந்து வருகின்றது. தயா மாஸ்டர் மற்றும் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பாக மட்டுமே அரசு தகவல்களை வெளியிட்டு வருகின்றது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மற்றொருவர், இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவோ அல்லது இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பாகவோ அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவுக்குக் கூட அரசு தகவல் தெரிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications