மைன்ட்ரீ ஆர் அன்ட் டி பணியாளர்களுக்கு 15 சதவீத சம்பள வெட்டு
டெல்லி: பெங்களூரைச் சேர்ந்த மைன்ட்ரீ ஐடி நிறுவனம் தனது நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதியக் குறைப்பை அமல்படுத்தவுள்ளது.
மைன்ட்ரீ நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவில் கிட்டத்தட்ட 1100 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 200 பேருக்கு இந்த ஊதியக் குறைப்பு அமல்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைக்காவும் இந்த ஊதியக் குறைப்பை அது அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் மற்றும் சர்வதேசப் பிரிவின் தலைவருமான புனீத் ஜெட்லி கூறுகையில், பயன்பாட்டு அளவு 60 சதவீதத்திற்கும் கீழே போய் விட்டது. இதனால்தான் 15 சதவீத ஊதியக் குறைப்பு என்ற முடிவை எடுக்க வேண்டியுள்ளது. இது ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஊழியர்களுக்குப் பொருந்தும் என்றார்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த ஊதியக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாம். இந்த ஊதியக் குறைப்பு குறுகிய கால நடவடிக்கைதான் என்றும், நிலைமை மேம்பட்டால், மீண்டும் ஊதியம் உயர்த்தப்படும் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக ஊழியர்களை நீக்குவது, நீண்ட விடுப்பு கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பதில் இந்த நடவடிக்கையாக தாங்கள் தேர்வு செய்ததாக கூறும் ஜெட்லி, விரைவில் நிறுவனத்தின் நிலை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மைன்ட்ரீ நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ. 54.54 கோடியாக இருந்தது.












Click it and Unblock the Notifications