Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்கு எந்திரம்: ஜெ-ராமதாஸ் டெல்லி போகாதது ஏன்?- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று கூறும் ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று டெல்லிக்குச் சென்று அதை நிரூபிக்க ஏன் தயங்குகின்றனர் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவினருக்கு முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

வரும் 18ம் தேதி 5 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்று மதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகவே பொறுப்பேற்றிருந்து இந்த முறை கூட்டணி தர்மத்தை கருத்திலே கொண்டு, தான் போட்டியிடாவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முன் வந்ததோடு முழுமூச்சோடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற அரும்பாடுபட்டு வரும் மு.கண்ணப்பனை இந்த நேரத்தில் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தொடர்ந்து சட்டப் பேரவைத் தொடரில் கடந்த ஒரு மாத காலமாக கலந்து கொண்ட காரணத்தினால் என்னுடைய உடல் நிலை கருதியும், கழகத்தின் முதன்மையினர் நான் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று கடுமையாக தடுத்த காரணத்தினாலும் எனக்குப் பிடிக்காமலே நான் இந்த கட்டாய ஓய்வினை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்னேன்.

ஆனாலும் மனம் கேட்காத காரணத்தால், அண்ணன் இந்த முறை நம்மிடம் வாக்கு கேட்கவில்லையே என்ற மனவருத்தம் உன் மனதில் சிறிதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும் நான் இந்தக் கடிதத்தின் மூலமாக எப்போதும்போல் உனக்கு வேண்டுகோள் விடுக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே பிரதான எதிர்க் கட்சியின் தலைவியான ஜெயலலிதா தேர்தல்களையே புறக்கணிக்கப் போவதாக ஓர் அறிவிப்பினை என்ன காரணத்தினாலோ செய்தார். அது அவருடைய சொந்தக் கட்சியின் கருத்து என்ற முறையில் நாமும் அதைப் பற்றி பெரிதாக எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.

இன்னும் கூடச் சொல்லப் போனால், ஜெயலலிதா மீண்டும் விடுத்த அறிக்கையில் நான்தான் தேர்தலைப் புறக்கணித்துவிட்டேனே, பிறகு ஏன் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும், திமுகவும், காங்கிரசும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டியதுதானே என்றும் கேள்வியை எழுப்பினார்.

ஆனாலும் ஜெயலலிதாவின் கருத்துக்களை இதுவரை அவருடன் தோழமைக் கட்சிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்க மறுத்து அவருடைய தயவு இன்றியே இடைத் தேர்தலில் போட்டி போடப் போவதாக அறிவித்து, தேர்தல் களத்திலும் குதித்து விட்டன.

இடைத் தேர்தல்களை புறக்கணிக்க ஜெயலலிதா பல்வேறு காரணங்களைத் தெரிவித்திருந்த போதிலும், அதிலே ஒன்று மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்றும், அவற்றில் மோசடிகளை நிகழ்த்த முடியும் என 2000ம் ஆண்டிலிருந்து திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையத்திற்குத் தான் உண்டு.

2000ம் ஆண்டிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு என்று கூறும் ஜெயலலிதாவைக் கேட்க விரும்புவதெல்லாம், 2001ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததே, அது எப்படி?.

அதன் பிறகு நடைபெற்ற பல இடைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதே, அது எப்படி? அப்போதெல்லாம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் தானே பயன்படுத்தப்பட்டது.

தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையம் எந்தக் கட்சியையும் சாராத ஒரு அமைப்பு. அவர்களால் ஒரு குறிப்பிட்ட தொகுதியிலே உள்ள மின்னணு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்வதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற பாணியில் குற்றம்சாட்ட முயல்கிறார்கள்.

2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதா இதே குற்றச் சாட்டைக் கூறி, அதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம், ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் டெல்லிக்கு தேர்தல் ஆணையத்திற்கு வருமாறும், அங்கே உள்ள எந்தவொரு எந்திரத்தை வேண்டுமானாலும், எடுத்து அதிலே தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கத் தயாரா என்றும் கேட்டது. அப்போது ஜெயலலிதா அதற்கு பதிலும் சொல்லவில்லை, டெல்லிக்குச் செல்லவும் இல்லை.

கடந்த ஜூலை மாதம் மத்தியில் தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி சண்டிகார் வந்தபோது, செய்தியாளர்களுக்கு அளித்த பதிலில், ஓட்டுப் பதிவு எந்திரங்கள் குறித்து அவ்வப்போது சிலர் புகார் கூறியும், சந்தேகம் எழுப்பியும் வருகிறார்கள். ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் உட்பட பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்படுகின்றன.

ஆனால் ஓட்டுப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பது தான் உண்மை. சுமார் 25 வருட கடின உழைப்புக்கு பிறகு, ஓட்டுப் பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதன் செயல்பாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு முழு திருப்தி உள்ளது. இந்த எந்திரங்கள் 100 சதவீதம் முறைகேடு செய்ய முடியாதவை. இதை சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது.

இந்த எந்திரங்கள், நாட்டுக்கே பெருமை என்று ஒரு ஹைகோர்ட் கூறியிருக்கிறது. ஒரு நாடாளுமன்ற கமிட்டி உட்பட, இரண்டு தொழில்நுட்ப குழுக்கள் ஒட்டுப் பதிவு எந்திரங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. நமது ஓட்டுப் பதிவு எந்திரங்கள் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ஓட்டுப் பதிவு எந்திரங்களை விடச் சிறந்தவை. இவற்றை உடைக்கலாமே தவிர, முறைகேடுகளை நிகழ்த்த முடியாது. எனவே எந்திர ஓட்டுப் பதிவு முறையை கை விட்டு, ஓட்டுச் சீட்டு முறையை கொண்டு வரும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆனால், இதற்குப் பிறகும் ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டைச் சொன்னதும், அவருடைய முக்கிய தோழமைக் கட்சித் தலைவர்களான டாக்டர் ராமதாசும், வைகோவும், ஆமாம், ஆமாம் தேர்தல் வாக்குப் பதிவு எந்திரத்திலே கோளாறு, நாங்களும் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று பஜனை பாடியிருக்கிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு உடனடியாக தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு என்று நீங்கள் கூறிவரும் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது. எனவே, தாங்கள் டெல்லி வந்து தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிற எந்திரங்களை பரிசோதிக்கலாம், தில்லுமுல்லு செய்ய முடியும் என்று நேரில் கண்டு நிரூபித்துக் காட்டலாம் என்று தெரிவித்திருந்தது.

தமிழகத்திலே உள்ள செய்தியாளர்களை அழைத்து தேர்தல் இயந்திரத்தில் தில்லுமுல்லு என்று பேட்டி கொடுக்கும், பா.ம.க. நிறுவனர் தேர்தல் ஆணையத்தின் அழைப்பினையேற்று டெல்லி சென்று நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டியதுதானே? ஏன் அவர் டெல்லி செல்லவில்லை? ஏன் வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்பதை நிரூபித்துக் காட்டவில்லை?

தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவருக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை. தேர்தல் வாக்குப் பதிவு எந்திரத்தில் கோளாறு என்று கூறிய எல்லாக் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்து, நிரூபித்துக் காட்டச் சொல்லியிருந்ததே, அந்தச் செய்தி 4-8-2009 தேதிய ஏடுகளில் எல்லாம் வந்ததே? ஏன் எந்தத் தலைவர்களும் செல்லவில்லை. தங்கள் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டவில்லை?

மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கு எதிராக பல உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றங்களிலும் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, "இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் முறையிட வேண்டும்'' என்பதுதான்.

ஜெயலலிதா போன்றவர்களின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, தேர்தல் கமிஷன் செயலாளர், ஆர்.கே. ஸ்ரீவத்சவா விடுத்துள்ள அறிக்கையில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் சிறிதளவு கூட சந்தேகத்தின் நிழல் படிவதை அனுமதிக்கக் கூடாது என்ற கடுமையான பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உள்ளது. வாக்குப் பதிவு எந்திரங்களில் தவறு ஏற்படலாம் என்ற குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் முற்றிலுமாக நிராகரிக்கிறது. எனினும், வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்தேகம் எழுப்பும் அனைவரையும் அழைக்க தேர்தல் கமிஷன் தீர்மானித்திருக்கிறது.

அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு இந்த வாரம் வந்து, முறைகேடு குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கலாம். இயந்திரம் குறித்த அவர்களுடைய குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டலாம்.

அதற்காக தொழில்நுட்ப வல்லுநர் குழுவும், வாக்குப் பதிவு எந்திரங்களை தயார் செய்து அளிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களும் தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் குறைபாடுகளை எடுத்துக் கூற வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது வல்லுநர் குழுவினர் விளக்கம் அளிப்பார்கள். இதன்மூலமாக நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தின் மீது எழுந்துள்ள தவறான அபிப்பிராயங்கள் மாறக் கூடும் என்று நம்புகிறோம் என்று கூறி, இது அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

இதற்குப் பிறகு 'ஜெயலலிதா அண்ட் கம்பெனி' டெல்லிக்குச் சென்றிருக்க வேண்டுமே தவிர, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கைக்குப் பிறகும், வாக்குப் பதிவு எந்திரத்திலே கோளாறு, எனவேதான் புறக்கணித்தோம் என்று இன்று அறிக்கை விட்டிருக்கிறார் என்றால், அது ஊரை ஏமாற்றுகின்ற செயல்தானே?.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஜெயலலிதா படித்தாரா? இல்லையா? பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் அழைப்பையேற்று டெல்லிக்கு உடனடியாகச் செல்லாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல அறிக்கை என்ற பெயரால் என்ன எழுதியிருக்கிறார் என்று யாருக்குமே புரியாத வகையில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

"ஆடத்தெரியாதவள் மேடை கோணல்'' என்று சொன்னதைப்போல தேர்தல் புறக்கணிப்புக்கு வாக்குப் பதிவு எந்திரத்திலே கோளாறு என்று கூறுவதும் இருக்கிறது என்பது தானே உண்மை!.

எது எப்படியோ போகட்டும்- அதைப் பற்றியெல்லாம் நீ கவலைப்படாமல்- வெற்றிக் கோட்டினை எட்டிட உன் பணி தொடரட்டும்!

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+