ரூ. 30,000 நஷ்ட ஈடு வழங்க போலீசுக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவு
மதுரை: மதுரையில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரை தாக்கிய வழக்கில் போலீசார் அவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கூடல்புதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி பரிமளா. இவர்கள் கடந்த 2007 ஜனவரி மாதம் 11 ம் தேதி அன்று வீடு மராமத்து வேலைக்காக மணலை சாலையோரத்தில் கொட்டி இருந்தனர்.
இந் நிலையில் அன்று இரவு கூடல்புதூர் எஸ்.ஐ. ஷகீலா, ஏட்டுக்கள் மருதமுத்து, கணேசன் ஆகியோர் சென்று மணல் குறித்து விசாரித்தனர். அப்போது போலீசார் பரிமளாவின் தந்தை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நாராயணமூர்த்தியை மிகவும் தரக்குறைவாக பேசி, அவ மரியாதை செய்துள்ளனர்.
இதையடுத்து பரிமளாவின் மகன் சுதாகர் போலீசாரின் தவறை சுட்டிகாட்டியுள்ளார். ஆனால், ஆத்திரமுற்ற போலீசார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, நாராயணமூர்த்தியின் சட்டையை கிழித்தனர். பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில், தங்கள் மீது போலீசார் தாக்கியது குறித்து நாராயணமூர்த்தி மாஜிஸ்திரேட்டிடம் புகார் தெரிவித்தார். அதை பதிவு செய்து கொண்ட மாஜிஸ்திரேட், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார்.
இந் நிலையில் இது தொடர்பாக பரிமளா, வக்கீல் ஜின்னா மூலம் மனித உரிமை கமிஷனில் தனியாக புகார் செய்தார். கமிஷன் உறுப்பினர் மாரியப்பன் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிவில் அவர் பிறப்பித்த உத்தரவில்,
விசாரணையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சியங்களின்படி மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்று தெரிகிறது.
இதனால், எஸ்.ஐ.ஷகீலா ஏட்டு மருதமுத்து ஆகியோர் ரூ. 30 ஆயிரத்தை நஷ்ட ஈடாக நாராயணசாமி, அவரது மகன் சுதாகருக்கு 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.
தமிழக அரசு அந்த தொகையை வழங்கி விட்டு பிறகு அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யலாம் என்று உத்தரவிட்டார்.
போலீசாரின் மனித உரிமை மீறலுக்கு நீதிமன்றம் தனது சாட்டையை சுழற்றியுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்களுக்கும், காவலர்களுக்கும் மனித உரிமை குறித்த பயிற்சி அவசியம் அளிக்க வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் வேண்டுகோள்.












Click it and Unblock the Notifications