காவிரி, ஓகனேக்கலுக்கு தீர்வு கண்டால்தான் உண்மையான மகிழ்ச்சி நிலவும் - ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூவர் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் பேசியது கேட்பதற்கும், படிப்பதற்கும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. ஆனால் காவிரி, ஒகேனக்கல் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் தான் இந்த மகிழ்ச்சி நீடிக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை...

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பேரமாக சென்னையில் கன்னட புலவர் சர்வக்ஞர் சிலை திறந்துவைக்கப்பட இருக்கிறது.

இவை வெறும் சிலை திறப்பு விழாக்கள் மட்டுமல்ல. இருமாநில மக்களின் இதயங்களை திறக்கின்ற விழாக்கள் என்று தமிழக முதல்வரும், நிறுவப்படுவது இரு சிலைகள் மட்டுமல்ல, நமது இதயத்தை ஒன்றிணைக்கும் அடையாளச் சின்னங்கள் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் கூறியிருக்கிறார்கள்.

இது கேட்பதற்கும், படிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சி நீடித்து நிலைக்கவேண்டும். அதற்கு மக்களின் இதயங்கள் குளிர வேண்டும்.

அன்னையாக, அருள்பாலிக்கும் தெய்வமாக, அன்பு மருமகளாக, ஆண்டாண்டு காலமாக ஏற்றிப் போற்றிவரும் காவிரியை பிரிந்துவிட நேரிடுமோ என்ற கவலையில் தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பிரச்சினை தமிழகத்தின் வாழ்வுப் பிரச்சினையாகவும் கருதப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளாக காவிரி சிக்கலுக்குத் தீர்வு காணப்படவில்லை.

வாராது வந்த மாமணி...

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் தாகம் தீர்க்கப்படாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வாராது வந்த மாமணி என்று சொல்வார்களே அதைப்போல, அந்த மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு 2008-ம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டிய முப்பது நாட்களுக்குள்ளாகவே திட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், மகிழ்ச்சியில் திளைத்த அந்த இரு மாவட்ட மக்களும் இன்றுவரை சோகத்தில் மூழ்கிப்போயிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையே இல்லை என்றும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையினால் தீர்வு காணமுடியும் என்றும், தமிழக முதல்வரை அருகே வைத்துக் கொண்டு அவரது அன்புத் தம்பி' எதியூரப்பா அறிவித்திருக்கிறார்.

சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது...

இந்த சந்தர்ப்பத்தை தமிழகம் நழுவ விட்டுவிடக்கூடாது. 1968-ம் ஆண்டு வீரேந்திர பாட்டீல் காலத்தில் தொடங்கி தொடர்ந்து 24 முறைக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்படாமல் இருக்கும் காவிரி பிரச்சினைக்கு எதியூரப்பா காலத்தில் தீர்வுகாண்பதற்கான பேச்சு வார்த்தையை தமிழக முதல்வர் தாமதமின்றி தொடங்க வேண்டும்.

தேசிய உணர்வு, ஒருமைப்பாடு, ஒரே நாடு என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல், பழைய ஆயக்கட்டுகளின் உரிமை என்ற சட்டவிதிமுறைகளின்படியும், காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் குரல் நியாயத்தின் அடிப்படையிலானது என்பதையும் பேச்சுவார்த்தையின் மூலம் அவருக்கு உணர்த்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். அதன்மூலம் டெல்டா மாவட்ட மக்களின் சோகத்தை தீர்க்கவேண்டும்.

தாகமும், சோகமும் தீர வேண்டும்...

அதேபோன்று 1998ம் ஆண்டில் மத்திய அரசின் தடையில்லா சான்றினையும், கர்நாடக அரசின் அனுமதியையும் பெற்றுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை தொடர்ந்து கிடப்பில் போட்டு வைக்காமல், விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

அப்போதுதான் அந்த இரு மாவட்ட மக்களின் தாகம் தீரும். இப்படி தமிழக மக்களின் சோகமும், தாகமும் தீர்ந்தால் தான் இதயங்கள் குளிரும். வள்ளுவருக்கும், சர்வக்ஞருக்கும் பெருமை சேர்ப்பதாகவும் அமையும். அத்தகைய நிலையில் தான் நடந்தாய் வாழி காவேரி' என்ற சிலப்பதிகாரத்தின் கவிதை வரிகளை உரக்க, உளமார இசைக்கவும் முடியும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+