பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து-புனே நிறுவனத்துக்கு ரூ. 10 கோடி
புனே: பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து தயாரிக்க புனேவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு உலக சுகாதார அமைப்பு ரூ. 10 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.
இது குறித்து உலக சுகாதார மையத்தின் தென் கிழக்கு ஆசிய பகுதியின் தொற்று நோய் பிரிவு இயக்குநர் டாக்டர் ஜெய் நாராயண் கூறுகையில்,
புனைவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் எங்களிடம் பன்றி காய்ச்சல் மற்றும் சாதாரண ப்ளு காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிக்க எங்களிடம் உதவி கேட்டது. அவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு ரூ. 10 கோடி வழங்கியுள்ளது. ஐரோப்பா, அமரிக்க நாடுகளும் தற்போது தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
டாமிப்ளு மாத்திரைகளை அனைத்து ப்ளு காய்ச்சலுக்கும் கொடுக்க முடியாது. தற்போது தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் டாமிப்ளு பன்றி காய்ச்சல் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண ப்ளு காய்ச்சல் இருப்பவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்தால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்றார்.
டெல்லியில் உள்ள உலக சுகாதார அமைப்பின் துணை மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் சிங் கூறுகையில், இன்னும் இரண்டு அல்லது நான்கு மாதத்தில் இந்தியாவில் தடுப்பு மருந்து தயாராகிவிடும். அதுவரை மக்கள் பீதியடையாமல் இருக்க வேண்டும்.
அதுவரை தற்போது பன்றி காய்ச்சல் அதிகம் பரவி வரும் பகுதியில் உள்ள மக்கள் முக கவசம் போன்றவற்றை அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
தாய்லாந்தில் 97 பேர் பலி...
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தாய்லாந்தில் தான் அதிக பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இங்கு 97 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருப்பதாகவும், சுமார் 11,398 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications