ஸ்வைன்: டெஹ்ராடூன் மாணவர் 31வது பலி?
டெஹ்ராடூன்: புனே சென்றுவிட்டு டெஹ்ராடூன் திரும்பிய 24 வயது மாணவர் ஒருவர் பன்றி காய்ச்சல் பாதிப்பால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் நேற்று வரை 30 பேர்களை பலி வாங்கி இருந்தது. இதை தடுக்க மத்திய அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் புனேவில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்து வந்த ரவுனக் சிங் என்ற மாணவர் கடும் காய்ச்சல் காரணமாக தனது சொந்த ஊரான டெஹ்ராடூனுக்கு திரும்பினார்.
அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதை பார்த்த அவரது பெற்றோர்கள் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க அழைத்து சென்றனர்.
ஆனால், அவர் போகும் வழியில் மீரட் நகரில் மரணமடைந்தார். இதையடுத்து பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், அவருக்கு பன்றி காய்ச்சல் இருந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இறந்து போன அந்த மாணவரின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவற்றின் முடிவு தெரிந்த பின்னரே எதுவும் உறுதியாக சொல்ல முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications