தமிழக அரசு உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு-நெடுமாறன்
சென்னை: தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், தற்போது அது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு என தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
ஆனால், இது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக் குழு ஆகியவை தீர்ப்பளித்துள்ளன. அதன் அடிப்படையில் தான் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான், வைகோ உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டோம்.
தற்போது நீதிமன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தலைமை செயலர் தவறாக பயன்படுத்தப்படுகிறார்...
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்களின் படங்கள், கொடிகள் மற்றும் சின்னங்களை வெளியிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று ஊடகங்களையும் தலைமைச் செயலாளர் மிரட்டியுள்ளார்.
முழு கடையடைப்பு நடத்துவது சட்ட விரோதம் அல்ல என்று 3-2-2009-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கடந்த பிப்ரவரி 4ம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தை சட்ட விரோதமானது என எச்சரித்து தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார்.
நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும், கட்சிகளையும், ஊடகங்களையும் மிரட்டுவதற்கும் தலைமைச் செயலாளரை முதல்வர் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் கருணாநிதி...
ஈழத் தமிழர் பிரச்னை சுமுகமாக தீர்ந்து விட்டது என்று சில நாள்களுக்கு முன்னாள் கூறிய முதல்வர் இப்போது முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். இப்படி முன்னுக்கு பின் முரணாகச் செயல்படுவது அவரது வழக்கமாகி விட்டது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை சட்ட விரோதமான மிரட்டல்கள் மூலம் ஒடுக்க முயல்வது ஒருபோதும் வெற்றி பெறாது என நெடுமாறன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications