ஜெ. பிறந்த நாள் பரிசு வழக்கு - செப். 4க்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது கடந்த 1993-ல் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது பல்வேறு வங்கிகளில் இருந்து அவருக்கு டிமான்ட் டிராப்டுகளாக ரூ.2 கோடி பணம் பரிசாக வந்தது. அதை ஜெயலலிதா தன் வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொண்டார்.
இது சட்டப்படி தவறு என்பதால், இதுகுறித்து சிபிஐ 1996-ல் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2006 ஜூலை மாதம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்ப முடியவில்லை. தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்தது. அதிலும், வழக்கில் இன்னொரு நபரான செங்கோட்டையன் இதுவரை 37 முறை வாய்தா வாங்கி இழுத்தடித்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த சிபிஐ, நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கு 13 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையன் 37 தடவை வாய்தா வாங்கி உள்ளார். எனவே குற்றச்சாட்டு பதிவு தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி முகம்மது இசாத் அலி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார்.
ஆனால் அதற்கு நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கு தாமதமாகி வருகிறது. இன்று (வியாழன்) மாலைக்குள் பதில் மனு தாக்கல் செய்யுங்கள். இல்லையெனில் வரும் 4-ந்தேதி ஜெயலலிதா உள்பட 3 பேரையும் கோர்ட்டுக்கு நேரில் வரவழைத்து குற்றச்சாட்டை பதிவு செய்ய உத்தர விடப்போகிறேன் என்றார்.
இதையடுத்து வக்கீல் நவநீத கிருஷ்ணன் இன்று மாலையே மனுதாக்கல் செய்வதாக கூறினார்.
இந்த நிலையில் இழுத்தடித்து வந்த செங்கோட்டையன் இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications