தூத்துக்குடியில் கொல்கத்தா டிரைவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியா? டீன் மறுப்பு
தூத்துக்குடி: பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொல்காத்தாவை சேர்ந்த லாரி டிரைவர் நேற்று இறந்தார். ஆனால் அவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக இறக்கவில்லை என்று மருத்துவக் கல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா வடக்கு ஆர்கான்ஸ் பகுதியை சேர்ந்தவர் பப்பி அல்தார். லாரி டிரைவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவர் பணி காரமணாக தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடி வந்தார். அங்கு நடந்து வரும் நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டுள்ள கான்ட்ராக்டர் ஒருவரிடம் லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு அல்தாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஒரு வாரமாக காய்ச்சல் நீடித்ததால் தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி அரசு மருத்துமனையில் பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் அனு்மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிக்சை பலன்றி பரிதாபமாக இறந்தார்.
ஆனால் அல்தார் பன்றிக் காய்ச்சல் காரணமாக இறக்கவில்லை என்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் காய்ச்சல் காரணமாக முதலில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அல்தார். பின்னர் பன்றிக் காய்ச்சல் இருப்பதாக தவறான தகவலின் பேரில் அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
அவருக்கு உண்மையில் பன்றிக் காய்ச்சல் இல்லை. பொது வார்டில்தான் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். சர்க்கரை நோயும், அதனால் சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டு அவர் இறந்துள்ளார். அவருக்கு நிச்சயமாக பன்றிக் காய்ச்சல் இல்லை என்றார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடலோரக் காவல்படை வீரர் நாயர் என்பவர் மட்டுமே பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் டீன் தெரிவித்தார்.
இதற்கிடையே, அல்தாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் வேலை செய்து வந்த கான்ட்ராக்ட் நிறுவனம் கொல்காத்தாவிலுள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளது. அவர்கள் வருகிற 25ம் தேதி தூத்துக்குடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications