நேருக்கு நேர்..மலேசிய அமைச்சருக்கு 'டத்தோ' சவால்
கோலாலம்பூர்: அமைச்சர் எஸ்.சுப்ரமணியத்தின் சவாலை நான் ஏற்கிறேன். நேரம், இடத்தைக் குறித்துச் சொல்கிறேன். நேருக்கு நேர் வாதாட அவர் தயாரா என்று மலேசிய அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவருமான எஸ்.சுப்ரமணியத்திற்கு முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு சவால் விட்டுள்ளார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் சுப்ரமணியம். அடுத்த மாதம் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் டத்தோ சாமிவேலுவை விமர்சித்திருந்தார் சுப்ரமணியம்.
இதையடுத்து சுப்ரமணியத்திற்கு சவால் விட்டுள்ளார் டத்தோ சாமிவேலு. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இடம், தேதியைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன். அவர் வரத் தயாரா.
எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்களே பார்க்கட்டும், முடிவைச் சொல்லட்டும். மலேசிய இந்தியர்களுக்கு நான் எதையும் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. காரணம், அவர்கள் புத்திசாலிகள் என்றார் சாமிவேலு.
செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் தேர்தலில் சுப்ரமணியம் பதவிக்கு வருவதை சாமிவேலு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது வெற்றியைத் தடுக்க அவர் முயற்சிகள் செய்து வருவதாக பேச்சு அடிபடுகிறது.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1979ம் ஆண்டிலிருந்தே டத்தோ சாமிவேலுதான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
