சென்னை கேப்டன்-மனைவி கொலை: சிபிசிஐடிக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் கப்பல் கேப்டன் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரை அருகே உள்ள பனையூரில் வசித்து வந்தவர் இளங்கோவன். முன்னாள் கப்பல் கேப்டனான இவரது மனைவி ரமணி.

நேற்று முன்தினம் இரவு இளங்கோவன் மற்றும் ரமணி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள் வசந்தியும் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்தார். இரு பேரப்பிள்ளைகளும் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜன் என்கிற சண்முகராஜன் கைது செய்யபப்ட்டார். நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். இதனால் மேலும் பரபரப்பானது.

இந்த நிலையில் இளங்கோவன், ரமணி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ராஜன் கொலையாளியாக என்ன காரணம்...

இளங்கோவன் வசம் இருந்த மிகப் பெரிய நிலத்தை விற்கும் உரிமை முதலில் ராஜன் வசம் இருந்ததாம். இதை விற்றால் பல கோடி லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார் ராஜன்.

ஆனால் திடீரென ராஜனுக்குக் கொடுத்திருந்த பவரை இளங்கோவன் ரத்து செய்து விட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் அவர் கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட இளங்கோவனுக்கு சொந்தமான 157 ஏக்கர் நிலத்தை விற்றுக் கொடுப்பதற்காகத்தான் சண்முகராஜன் அதிகாரம் பெற்றிருந்தாராம்.

குறிப்பிட்ட அந்த இடத்தை கூடுதல் விலைக்கு விற்றுக் கொடுத்தால் கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கும் என்று சண்முகராஜன் மகிழ்ச்சியுடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென இளங்கோவன், ராஜனுக்குக் கொடுத்திருந்த பவரை ரத்து செய்து விட்டார். இதனால் கோபமடைந்த ராஜன், இளங்கோவன் மற்றும் ரமணியை சுட்டுக் கொன்று விட்டார்.

விசாரணையின்போது தொடக்கத்தில் தான் கொலை செய்யவில்லை என்று பிடிவாதமாக கூறியுள்ளார். அந்த வழியாக நான் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போதுதான் இளங்கோவனின் வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியான நான் வீட்டுக்குள் ஓடினேன்.

அப்போது வீட்டில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த ஒருவன் துப்பாக்கி இருந்த பையை என்னிடம் கொடுத்து விட்டு ஓடினான். நான் அவனை பிடிக்க சென்றேன். அதற்குள் நான்தான் கொலையாளி என்று நினைத்து பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கி விட்டனர் என்று கூறியுள்ளார்.

இதையே, தன்னை காவல் நிலையத்தில் வந்து சந்தித்த மனைவி மற்றும் உறவினர்களிடமும் கூறியுள்ளார் ராஜன்.

ஆனால் இளங்கோவனின் பேரப் பிள்ளைகள் வந்து சண்முகராஜனை அடையாளம் காட்டியதால் அவரது குட்டு வெளி்ப்பட்டு விட்டது.

அதன் பின்னர்தான் ராஜன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இளங்கோவன் வீட்டுக்குள் புகுந்த ராஜன், மிகவும் மூர்க்கமான முறையில் நடந்து கொண்டுள்ளார். இளங்கோவனையும், அவரது மனைவியையும் அடுத்தடுத்து சுட்டுக்கொன்ற அவர் மருமகள் வசந்தியையும் குறி பார்த்து சுட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த வசந்தியை ரத்தம் வடிய, வடிய ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று நிலப் பத்திரங்களைத் தேடிப் பார்த்துள்ளார். இதனால் வீடு முழுக்க ரத்தக்கறையாக மாறியுள்ளது.

சாதாரண பால் வியாபாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் ராஜன். பின்னர் கிரானைட், மார்பிள் விற்கும் தொழிலில் குதித்தார். கடுமையான உழைப்பாளி. கையில் பணம் நிறைய புரள ஆரம்பித்ததும் ரியல் எஸ்டேட்டிலும் குதித்தார்.

சிறு வயது முதலே அவர் சைதாப்பேட்டையில்தான் வசித்து வந்தார். எதற்கெடுத்தாலும் அவருக்கு கோபம் வந்து விடுமாம். யாருடன் மோதல் ஏற்பட்டாலும் அவர்களை அடித்து நொறுக்கி விடுவார் என்று அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.

முன்கோபியான அவர் யாரிடமாவது சண்டை போடாமல் வீடு திரும்ப மாட்டார் என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில்தான் பெரும் பணம் லாபமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு, இளங்கோவன் அதற்குத் தடையாக வந்து விட்டதால் முன்கோபத்தில் துப்பாக்கியைத் தூக்கும் அளவுக்குப் போய் இப்போது அவரும் இறந்து போய் விட்டதாக கூறுகின்றனர்.

கள்ளத்துப்பாக்கிகள் நடமாட்டம்..

சண்முகராஜன், இளங்கோவன் குடும்பத்தினரை சுட பயன்படுத்தியது, பீகாரில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கள்ளத் துப்பாக்கியாகும்.

இந்தத் துப்பாக்கி அங்கு 15 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறதாம். அதை இங்கு கொண்டு வந்து 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை பலரும் விற்கிறார்களாம்.

சண்முகராஜன் பயன்படுத்திய 9எம்எம் துப்பாக்கி, போலீஸார் பயன்படுத்தும் துப்பாக்கியைப் போலவே அதாவது ஒரிஜினல் துப்பாக்கியைப் போலவே இருக்கும்.

போலீஸார் பயன்படுத்தும் ஒரிஜினல் துப்பாக்கிகளால் 50 மீட்டர் தூரம் வரையிலான இலக்கை குறி பார்த்து சுட முடியும். ஆனால் கள்ளத் துப்பாக்கிகளுக்கு அந்த அளவுக்கு சக்தி கிடையாது. அதிகபட்சம் 20 மீட்டர் தொலைவிலான இலக்குகளைத்தான் சுட முடியும்.

பெரும்பாலும் இந்தத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், எதிரிகளை பயமுறுத்தவே வைத்திருப்பார்கள்.

ஆனால் இளங்கோவன் மற்றும் அவரது மனைவி ரமணியை வெகு நெருக்கத்தில் இருந்து சுட்டுள்ளார் ராஜன். இதனால்தான் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.

பீகாரில் ஏகப்பட்ட கோஷ்டிகள் உள்ளன. எதிரிகளும் அவர்களுக்கு அதிகம். இதனால் ஒவ்வொருவரும் சுய பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன்தான் அலைகிறார்கள். தற்போது இந்தக் கலாச்சாரம் சென்னைக்கும் வந்து விட்டதாகவே தெரிகிறது.

சென்னையில் ரகசியமாக கள்ளத் துப்பாக்கிகளை விற்கும் சந்தையே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களிடம் சகலவிதமான துப்பாக்கிகளும் கிடைக்கிறதாம்.

அவர்களிடமிருந்துதான் ராஜன் தனது பாதுகாப்புக்கு உரிமம் பெறாத கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருந்தார்.

அவருக்கு அரசியல் பிரமுகர் ஒருவருடனும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இளங்கோவன் வீட்டுக்குக் கிளம்புவதற்கு முன்பு கூட அந்த அரசியல் பிரமுகருடன் ராஜன் பேசியதாக ஒரு தகவல் உள்ளது.

அந்த புள்ளி யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னையில் கள்ளத் துப்பாக்கிகள் விற்கப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சென்னையில் துப்பாக்கிகள் விற்கப்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. காலையில் ரயில் ஏறினால் மறுநாள் காலையில் பீகார் சென்று விடலாம். அங்கிருந்து துப்பாக்கியை வாங்கி வந்து விடுகின்றனர்.

எனவே இங்கு துப்பாக்கிச் சந்தை இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இங்கு யாராவது விற்பதாகவோ, வைத்திருப்பதாக தகவல் கிடைத்தால் அவர்கள் மீது ஆயுத கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+