வறுமை-குழந்தையை உயிரோடு சுடுகாட்டில் புதைத்த தாய்
கோவை: கோயம்புத்தூர் அருகே வறுமை காரணமாக பிறந்து இரண்டு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே உயிரோடு சுடுகாட்டில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ளது புதுப்புதூர். இங்கு உள்ள சுடுகாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. தலை மட்டும் லேசாக வெளியில் தெரிந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற பெண்கள் சிலர் குழந்தையின் அழுகுரல் கேட்டு சுடுகாட்டு பக்கம் வந்தனர். அங்கு குழந்தை புதைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த குழந்தையின் முதுகில் எறும்புகள் கடித்து கொண்டிருப்பதை பார்த்து கலக்கம் அடைந்தனர்.
பின்னர் அந்த குழந்தையை குளிப்பாட்டி, பால் கொடுத்து அதன் பசியை போக்கினர். குழந்தையை பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் மூலம், அவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
அந்த குழந்தையை போத்தனூர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்ந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த குழந்தை சாமி செட்டிபாளையத்தை சேர்ந்த லதா(35) என்பவரின் குழந்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறுகையில்,
எனது கணவர் பெயர் சின்னசாமி. மில் ஒன்றில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். அவர் என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். எனக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டு மாதத்துக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் எனது கணவர் திடீரென என்னிடம் சொல்லாமல் முதல் மனைவியின் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது என்னை பார்க்க அடிக்கடி வருவதில்லை. வந்தாலும் வந்தாலும் குடும்பச் செலவுக்கு பணம் கொடுக்கமாட்டார். இதனால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.
வறுமை காரணமாக இரண்டு மாத குழந்தையை புதுப்புதூர் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று மண்ணில் புதைத்தேன். முகத்தை மூட மனமில்லாமல் திரும்பி விட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications