சாதிவாரி கணக்கெடுப்பு: மொய்லி வற்புறுத்தல்
டெல்லி: 2011ம் ஆண்டு நடக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியாக நடத்தப்பட வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
இதுகுறித்து வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறுகையில், ஊரகப் பகுதிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 38.5 சதவீதம் இருப்பதாக அரசு மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த புள்ளி விவரம் சரியானதாக இல்லை என்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
எனவே இந்த விஷயத்தில் அரசுக்கு மிக, மிக சரியான, துல்லியமான, நம்பகத்தன்மை கொண்ட புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இதற்கு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும். இது குறித்து நான் பிரதமருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளேன்.
கர்நாடகாவில் நான் முதல் மந்திரியாக இருந்தபோது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் முஸ்லிம்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தினேன். இதன் மூலம் அவர்களுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடிந்தது.
சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிரான கொள்கையை காங்கிரஸ் கொண்டுள்ளது உண்மைதான். ஆனால் நான் வலியுறுத்துவது ஓட்டுக்காக அல்ல... அந்தந்த சமுதாய மக்களுக்குத் தேவையான திட்டங்கள் முறையாக முழுமையாகச் சென்று சேரத்தான். இட ஒதுக்கீட்டின் பலன்கள் இதன்மூலம்தான் முழுமையாகச் சேரும் என்பதாலும் இது பற்றி பரிசீலிக்கக் கேட்டுள்ளேன், என்றார்.












Click it and Unblock the Notifications