சயீத்தை பாக். உரிய முறையில் விசாரிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் புதிய நான் ஸ்டாப் ரயிலை இன்று காலை சென்னை சென்டிரல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சயீத்துக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டு விட்டது. பாகிஸ்தான் மண்ணிலிருந்துதான் மும்பை தாக்குல் சதித் திட்டம் தீட்டப்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதற்கான ஆதாரங்களும் பாகிஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
தற்போது ஹபீஸை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாகிஸ்தான் என்ன மாதிரியான வேடிக்கைகளை செய்தாலும் அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை.
எனது ஒரே கோரிக்கை என்னவென்றால், அவர் கைது செய்யப்பட வேண்டும். அவரிடம் மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே. மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் அவரது பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தான் மண்ணில்தான் ஆதாரம் உள்ளது. ஆனால் நம்மிடம் திரும்பத் திரும்ப பாகிஸ்தான் ஆதாரம் கேட்டு வருவது நகைப்புக்குரியது. ஹபீஸுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களுமே பாகிஸ்தான் மண்ணில்தான் உள்ளன.
எனவே பாகிஸ்தானில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதாரங்களை அங்குதான் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications