இலங்கைக்கு தமிழக குழு-பிரதமரிடம் திமுக-காங் எம்பிக்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Manmohan singh
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் திமுக மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் எம்.பிக்களும் சந்தித்து இலங்கைக்கு தமிழக எம்பிக்கள் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா, கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், மற்றும் டி.ஆர்.பாலு, கனிமொழி, பழனிமாணிக்கம், டி.கே.எஸ்.இளங்கோவன், சுகவனம், வசந்தி ஸ்டாலின், ஹெலன் டேவிட் உள்ளிட்ட திமுக எம்பிக்களும்,

ஜெயந்தி நடராஜன், சித்தன், மாணிக்தாகூர், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி உள்ளி்ட்ட காங்கிரஸ் எம்பி்க்களும், விடுதலைச் சிறுத்தை எம்பியான திருமாவளவன் ஆகியோர் காலை 10.15 மணி முதல் 10.45 மணி வரை பிரதமரை சந்தித்துப் பேசினர்.

அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் உடனிருந்தார். ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது முதல்வர் கருணாநிதி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை பிரதமரிடம் எம்பிக்கள் அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் போர் முடிந்த பிறகும் ஈழத்தமிழர்கள் தடுப்பு முகாம்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலம் தொடங்கும் முன்பு தமிழர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ஈழத் தமிழர்களின் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள உலகத் தமிழர்கள் எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர். எனவே ஈழத் தமிழர் உண்மை நிலையை அறிய தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும். அந்த குழு தடுப்பு முகாம்களுக்கு சென்று உண்மையை அறிந்து வரச்செய்ய வேண்டும். இந்த குழு பயணத்துக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு விரைவில் செய்ய வேண்டும்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குவது சமீபகாலமாக அதிகரித்து விட்டது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சிங்கள கடற்படை தாக்குதல்களில் 9 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துவிட்டது. அந்த பகுதியில்தான் நல்ல மீன் வளம் உள்ளது. எனவே தானமாக கொடுத்த கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்ப பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு சார்பில் பல கட்டங்களாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் ஈழத் தமிழர்களுக்கு போய்ச் சேர்ந்ததா என்பதை அறிய மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் தமிழக எம்.பிக்கள் கோரினர்.

இது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தர வேண்டும் என்றனர்.

தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர வீடு கட்டி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தற்போது மாதந்தோறும் 110 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை 250 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்றும் எம்.பிக்கள் கோரினர்.

இதையடுத்து அமைச்சர்களும் எம்பிக்களும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர். பிரதமரிடம் வைத்த கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தினர்.

ஜி-20 மாநாடு-நாளை யு.எஸ். கிளம்பும் பிரதமர்:

இதற்கிடையே அமெரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை அங்கு கிளம்புகிறார்.

நிதிச் சந்தைகளை வலுப்படுத்துவது, உலகப் பொருளாதார மீட்சி உள்ளிட்ட முக்கிய உலகப் பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

பிரதமருடன் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.

செப்டம்பர் 24 முதல் 25 வரை பிட்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவையும் மன்மோகன் சிங் சந்திப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+