சலசலப்புடன் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தல்
சென்னை: வாக்குப் பதிவின்போது சில இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்பட்டது உள்ளிட்ட லேசான சலசலப்புடன் உள்ளாட்சி இடைத் தேர்தல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
தமிழகம் முழுவதும் 506 உள்ளாட்சி பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 274 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
மற்ற இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடந்தது.
இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னையை அடுத்த திரிசூலம் ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்திரன் வெட்டிக் கொல்லப்பட்டதை ஏற்பட்ட காலி இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அவரது மனைவி திலகவதியும், அதிமுக சார்பில் சரஸ்வதியும், தேமுதிக சார்பில் கண்ணையாவும் போட்டியிடுகின்றனர். 2 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் வந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
திரிசூலம் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுக்க நேரடியாக நடைபெற்ற இந்த தேர்தலில் 11 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. சுமார் 10,000 பேர் வாக்களித்தனர்.
ஏற்கனவே, ஊராட்சி தலைவர் கொலையால் ஏற்பட்ட பதட்டத்தை அடுத்து, இடைத்தேர்தல் நடை பெறுவதையொட்டியும் அப்பகுதி முழுவதும் பெரும் பதட்டம் காணப்பட்டது. கடைகள் முழுவதும் அடைக் கப்பட்டிருந்தன. எனினும் போலீஸ் குவிப்பால், மதியம் வரை அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆலந்தூர் நகராட்சியில் 18வது வார்டு கவுன்சிலராக இருந்த நகராட்சி தலைவர் ஆர்.எஸ்.பாரதி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த காலி இடத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
ரவுடிக் கும்பல் மிரட்டல்...
திருச்சி மாநகராட்சி 44வது வார்டு உறுப்பினர் தேர்தலும் இன்று நடைபெற்றது. இதற்காக 3 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கல்லுக்குழி ரெயில்வே பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்குள் திமுகவைச் சேர்ந்த காஜாமலை விஜி தலைமையில் ஒரு ரவுடி கும்பல் திடீரென நுழைந்து வாக்காளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஹேமா இந்த ரவுடிகளின் துணையுடன் விதிமுறைகளை மீறி வாக்குச் சாவடிக்கு உள்ளே வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 17 பதவிகளுக்கும் சேலம் மாவட்டத்தில் 15 பதவிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 13 பதவிகளுக்கும், நெல்லை மாவட்டத்தில் 12 பதவிகளுக்கும், திருவாரூரில் 16 இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
நெல்லை, தூத்துக்குடியில் அமைதியான வாக்குபதிவு:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை முதல் அமைதியான வாக்குபதிவு நடைபெற்றது. வாக்கு பதிவு நடக்கும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் யூனியன் செந்தட்டியாபுரம் பஞ் தலைவர், தென்காசி நகராட்சி 16வது வார்டு உறுப்பினர், மானூர் யூனியன் 6வது வார்டு உறுப்பினர், 9 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், ஆகிய 12 பதவிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்கு பதிவு துவங்கியது.
நெல்லையில் வாக்கு பதிவிற்காக மொத்தம் 30 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குசாவடிகளிலும் அமைதியான வாக்குபதிவு நடந்தது. மானூர் யூனியன் கவுன்சிலர் தேர்தலில் காலை முதலே விருவிருப்பான வாக்குபதிவு நடந்தது.
தென்காசி நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ஓட்டு பதிவு நடந்தது. மற்ற 11 இடங்களில் ஓட்டு சீட்டு மூலம் தேர்தல் நடந்தது. 3 மணி நிலவரப்படி சுமார் 40 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்கு எண்ணிக்கை 9ம் தேதி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications