அதிமுகவின் 38வது ஆண்டு விழா-கொடியேற்றினார் ஜெ
சென்னை: அதிமுகவின் 38வது ஆண்டு விழாவையொட்டி கட்சித் தலைமையகம் வந்த கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சிக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி, தொண்டர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்.
அதிமுக தொடங்கப்பட்டதன் 38வது ஆண்டு விழா நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த அவர், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். சிறப்பு மலரையும் வெளியிட்டார். சிறப்பு மலரை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் அதிமுகவின் அமைப்பு சாரா டிரைவர்கள் பிரிவைச் சேர்ந்த 16,315 பேருக்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து அதற்கான பாலிசிகளை பிரிவின் தலைரான கமலக்கண்ணனிடம் வழங்கினார்.
பெரும் திரளாக திரண்டிருந்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்ல, அவர்களும் ஜெயலலிதாவுக்கு தீபாவளி வாழ்த்துக்களைக் கூறிக் கொண்டனர்.
மிகுந்த உற்சாகத்துடன் நேற்று ஜெயலலிதா காணப்பட்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் குஷியுடன் காணப்பட்டனர். நேற்றைய நிகழ்ச்சியில் இளம் பெண்கள் பாசறை மற்றும் இளைஞர் பாசறையைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கை...
மக்கள் மனதில் இன்னமும் மகத்தான சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, மறைந்தும் மறக்க முடியாத மாமனிதராய் மக்கள் நினைவிலே நிழலாடிக் கொண்டிருக்கின்ற எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (சனிக்கிழமை) 38-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த நன்னாளில் அ.தி.மு.க உருவாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தியாக தீபங்களையும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலை செய்யப்பட்ட தொண்டர்களையும், கட்சி பணியாற்றும் போது விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்த கழகத் தொண்டர்களையும் நினைவு கூறுகிறேன். கடந்த கால வரலாற்றினையும், எதிர்கால லட்சிய இலக்கினையும் நமக்கு நினைவூட்டிடும் நாள் தான் கழக துவக்க நாள்.
கட்சி தொடங்கப்பட்டு, ஒரு சில மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி வாகை சூடிய முதல் கட்சி அ.தி.மு.க. ஆம். அது தான் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தல் வெற்றி.
கட்சியினரின் முழு ஒத்துழைப்போடும், மக்களின் அமோக ஆதரவோடும் 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். திரைப்படத் துறையில் உள்ளவர்களும் அரசியலில் பிரகாசிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் புரட்சித் தலைவர்.
எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு, அவர் தோற்றுவித்த இயக்கத்தை பிளவுபடுத்தவும், புரட்சித் தலைவரின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் சதித் திட்டம் தீட்டப்பட்டது. என்னுடைய கடும் முயற்சியின் விளைவாக பிளவுபட்ட கழகம் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இழந்த இரட்டை இலை சின்னமும் மீட்கப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே இழந்த சின்னத்தை மீண்டும் பெற்று வரலாறு படைத்த இயக்கம் அ.தி.மு.க.
2006-ம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து விவசாய உற்பத்தியில் மந்த நிலை, தொழில் உற்பத்தி தேக்கம், விண்ணை முட்டும் விலைவாசி, கடுமையான மின் பற்றாக்குறை.
எதிர்க்கட்சியாக இருக்கின்ற போது, எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியதற்கேற்ப, தி.மு.க. ஆட்சியின் போக்கையும், ஜனநாயகப் படுகொலையையும், மக்கள் விரோதத் திட்டங்களையும் எதிர்த்து குரல் கொடுக்கின்ற இயக்கமாக; மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத போது, அதை தி.மு.க. அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அதை நிறைவேற்றித் தரும் வகையில் மக்களுக்காக போராடுகின்ற இயக்கமாக; தட்டிக் கேட்கின்ற இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்கள் நலப் பணி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இயக்கம் அ.தி.மு.க..
வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். தி.மு.க. ஆட்சி பற்றி மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, அனைத்து வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்து சேருமாறு பார்த்துக் கொள்ளக்கூடிய வலிமை, கழகச் செயல்வீரர்கள், வீராங்கனைகளாகிய உங்களிடம் தான் இருக்கிறது. இந்தப் பணியை நிச்சயம் திறம்பட செய்து முடிப்பீர்கள்.
தமிழ்நாட்டு உரிமைகளை பெற்றிட, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றிட, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்திட, ஏழைகளை ஏற்றிவிடும் ஏணிப்படியாக விளங்கும் அ.தி.மு.க. ஆட்சியை அமைக்க நாம் உறுதி ஏற்போம் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications