வீரப்பன் நினைவு நாள்-கோவிலில் எருமை கன்று பலி

இந் நிலையில் கொளத்தூரை அடுத்த கருங்கல்லூர் அருகே உள்ள சந்தியூரில் வீரப்பனின் குலதெய்வமான முனியப்பன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாரோ எருமை கன்றுக்குட்டியை பலியிட்டுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று வீரப்பனின் 5ம் ஆண்டு நினைவு நாளை அவரது குடும்பத்தினர் அனுஷ்டித்தனர்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மைசூர் சிறையில் உள்ள நிலையில் அவரது மகள்கள் வித்யாராணி, பிரபாவதி, வீரப்பனின் அண்ணன் மனைவி மாதம்மாள், மாதையனின் மருமகன் முனுசாமி மற்றும் மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனர் மணிவண்ணன், தலைவர் குபேந்திர குணபாலன், இளைஞரணித் தலைவர் செந்தில்குமார் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சமாதிக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வித்யாராணி, பிரபாவதி ஆகியோர்,
மைசூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் தாயாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு 3 மாதங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். எங்கள் தாயார் விடுதலை ஆவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளோம் என்றனர்.
வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி சென்னையில் பி.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் பிரபாவதி சென்னையில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
முனியப்பன் கோவிலில் எருமை குட்டி பலி:
இந் நிலையில் வீரப்பனின் குலதெய்வமான முனியப்பன் கோவிலில் எருமை கன்றுக்குட்டியை பலியிட்டு அதன் தலையை முனியப்பன் கோவிலில் வைத்து வழிபட்டு சென்றுள்ளனர்.
இதைச் செய்தது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த கோவிலில் ஆடு, கோழி பலியிடுவதே வழக்கம். எருமை கன்றுக் குட்டியை பலியிட்டுள்ளது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
