இலங்கை: கருணா அலுவலகம் மீது தாக்குதல்
கொழும்பு: மட்டக்களப்பில் உள்ள கருணாவின் கட்சி அலுவலகத்தை பிள்ளையானின் ஆதரவாளர்கள் தாக்கினர்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து தனிப் பிரிவாக இயங்கி இப்போது இலங்கை அமைச்சராக உள்ளார் கருணா.
கருணாவுக்கும் அவரிடமிருந்து பிரிந்த பிள்ளையான் கோஷ்டிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆதரவோடு பிள்ளையான் இப்போது கிழக்கு மாகாண முதல்வராக உள்ளார். அவரை பதவி நீக்க கருணா கோஷ்டி முயன்று வருகிறது.
இந் நிலையில் மட்டக்களப்பில் உள்ள கருணாவின் கட்சி அலுவலகத்தை பிள்ளையான் ஆதரவாளர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழர்கள் சொந்த பகுதிக்கு அனுப்பப்படுவர்:
இந் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து தமிழர்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவர் என இலங்கை அமைச்சர் முத்துசிவலிங்கம் கூறினார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தியா-இலங்கை உறவில் எந்த பிரச்னையும் இல்லை. ஓரிரு நாட்களில் முகாம்களில் உள்ள 40,000 தமிழர்கள் அவரவர் பகுதிகளுக்கு அனுப்பப்படுவர். மீதியுள்ள தமிழர்கள் இந்தாண்டுக்குள் அனுப்பப்படுவர் என அதிபர் கூறியுள்ளார்.
எனவே இந்தாண்டுக்குள் தமிழர்கள் அவரவர் சொந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு விடுவர். தமிழர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்ற இந்தியாவில் இருந்து குழு வந்துள்ளது. இலங்கை ராணுவத்துடன் இணைந்து இந்தக் குழு கண்ணி வெடிகளை அகற்றி வருகிறது என்றார்.
பின்தங்கியுள்ள தமிழர் பகுதிகள்:
இந் நிலையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் யுவா மாநிலப் பகுதிகள், கல்வி, தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியுள்ளதாக அம் மாநில அமைச்சர் செந்தில் தொண்டமான் கூறினார்.
தமிழகம் வந்த அவர் திருப்பூரி்ல் நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கையில், இலங்கை தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் என இரண்டு வகையான தமிழர்கள் உள்ளனர்.
யுவா மாநில பகுதியில், கடந்த 60 ஆண்டுகளாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி பாடுபட்டு வருகிறது.
இந்திய வம்சாவளி தமிழர்கள் 20 லட்சம் பேர் வசிக்கும் பகுதிகளில் கல்வி, தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் பின் தங்கியுள்ளன.
இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை குறித்து எங்களுக்கு தெரியாது. நாங்கள் இருப்பது வேறு மாநிலம்; யாழ்ப்பாணத்தில் நடப்பது எங்களுக்கு தெரியாது. ஒரு மாநில அமைச்சர் அதில் தலையிடவும் முடியாது.
சமீபத்தில் இலங்கை வந்த இந்திய எம்.பிக்கள் குழுவை, அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அழைத்து சென்று, அவர்கள் பார்வையிட விரும்பிய பகுதிகளை சுற்றிக் காட்டினார் என்றார்.












Click it and Unblock the Notifications