தாய்லாந்து: சீன பிரதமரை சந்திக்கும் மன்மோகன்
டெல்லி: தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் மாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அப்போது சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்துப் பேசுகிறார்.
அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தாய்லாந்தின் ஹூவா ஹின் நகரில் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவை நடைபெறவுள்ளன.
இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். அந்த சமயத்தில், சீனப் பிரதமர் வென் ஜியாபோவுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இதை இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அருணாச்சல் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வருவது, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேவையில்லாமல் தலையிடுவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அப்போது சீனாவிடம் இந்தியா தனது கவலையைத் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.
இரு தலைவர்களும் வருகிற சனிக்கிழமை சந்தித்துப் பேசுவார்கள் எனவும் தெரிகிறது.
பருவ நிலை மாற்றம் - இந்தியா, சீனா ஒப்பந்தம்
இதற்கிடையே, பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்தியா, சீனா இடையே டெல்லியில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணைய அமைச்சர் திரு சென்ஹுவா கையெழுத்திட்டனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்கள், கொள்கைகள், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டுறவு செயல்பாடுகளை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும்.
அத்துடன் ஆற்றல் சேமிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள், தூய்மையான நிலக்கரி, மீதேன் பயன்பாடு, காடுகள் வளர்ப்பு, காடுகளின் நீடித்த நிர்வாகம் ஆகிய துறைகளிலும் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
பருவநிலை மாற்றம் குறித்த ஐ. நா செயல்திட்ட பிரகடனம் மற்றும் அதன் கியோட்டோ பிரகடனம் ஆகியவை பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண மிகவும் பொருத்தமான வழிமுறைகள் என்று ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் முதலாவது ஷரத்தில் பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கு அமைச்சர்கள் நிலையில் ஆலோசனைகள் நடத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாவது ஷரத்தில் இந்திய-சீன பணிக்குழுக்களை அமைக்க இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. பசுமையில்ல வாயுக்கள் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பான கொள்கைகள், திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாடு குறித்து இருநாடுகளும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்வதை மேலும் வலிமைப்படுத்த மூன்றாவது ஷரத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் அமைப்புகளாக இந்தியாவின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தையும், சீனாவின் தேசிய மேம்பாடு மற்றும் சீர்திருத்த ஆணையத்தையும் ஒப்பந்தத்தின் மற்றொரு ஷரத்து நிர்ணயம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவது தொடர்பாக ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பரஸ்பர ஆலோசனை மற்றும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்து கொள்ள இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் அமலில் இருக்கும். இருநாடுகளில் யாராவது ஒருவர் ஆறுமாத காலத்திற்கு முன்பாக நோட்டீஸ் அளித்து ஒப்பந்தத்தை முடித்து கொள்ளும் எண்ணத்தை தெரிவிக்காத பட்சத்தில் இந்த ஒப்பந்தம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு தானாகவே புதுப்பித்து கொள்ளப்படும்.
சுமூகத் தீர்வு காணப்படும்- பிரணாப்
இதற்கிடையே, இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
சீனாவுடனான எல்லைப் பிரச்னை சமீபத்தில் தோன்றியதல்ல. 1914-ம் ஆண்டில் இருந்து இந்திய-சீன எல்லைக் கோடான மக்மோகன் எல்லைக் கோட்டை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை.
சீனா அப்போதும் இந்தியாவுடன் எல்லைப் பிரச்னை செய்தது. அதற்குப் பின்னரும் அப்பிரச்னையை சீனா தொடர்கிறது.
காலனி ஆதிக்க காலத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பகுதியாக இருந்துவருகிறது என்பது வரலாற்று உண்மை. ஆதலால் அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாட முடியாது.
இந்தியா குடியரசானது முதல் அருணாச்சலப் பிரதேச மாநிலம், நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு பிரதமர் மன்மோகன் சென்றதற்கு சீனா கண்டனம் தெரிவித்தது ஏற்றுக்கொள்ள இயலாத விஷயமாகும்.
நாட்டின் ஆளுங்கட்சியின் தலைவராக உள்ள பிரதமர், மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றார். இதை சீனா எதிர்ப்பது முறையல்ல.
பிரதமர் சென்றுவந்தபின், நான் கூட அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று வந்தேன். வந்தபின் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பகுதி என்று கூறினேன்.
எல்லை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் சீனாவுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணப்படும். இரு நாடுகளும் கலந்தாலோசிப்பதன் மூலம் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications