Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகிலுக்கு திருமணம் ஆனால் தான்..: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் இளமுகிலின் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

நான் பொதுவாக திருமண விழா அழைப்பிதழ்களை மணமேடைக்கு வந்த பிறகு தான் படித்து முழுமையாக அறிந்து கொள்வது வழக்கம்.

அப்படி அறிந்து கொண்டதில் நம்முடைய தம்பி முகில் என்னிடத்திலே பணியாற்றியவர், பணியாற்றிக் கொண்டிருப்பவர் என்றாலும் கூட, அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர், எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்றெல்லாம் நான் என்றைக்கும் அந்த கேள்விக்கு என்னை ஆளாக்கிக் கொண்டதில்லை.

ஆனால், இதுபோன்ற மணவிழாக்களில் யார் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை விளக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்த சமுதாயத்தில் ஒட்டு மொத்தமாக இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற ஒரு புத்துணர்வு, எழுச்சி இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது நாம் வடசேரிப் பகுதியைச் சேர்ந்தவர்கள், மன்னார்குடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள், திருத்துறைப்பூண்டிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் பகுதி பகுதியாகப் பிரித்தாலும் கூட, நாம் எல்லோருமே தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற அந்த உணர்வை வெளிப்படுத்தத்தான் திராவிட இயக்கம் பல்லாண்டு காலமாக தமிழகத்திலே பணியாற்றி வருகிறது.

ஒரு பொதுக்கூட்டத்தில் அல்லது இது போன்ற ஒரு திருமண விழாவில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்து பார்த்து இவ்வளவு பேரும் யார்? என்று அவர் எழுப்புகின்ற கேள்விக்கு நாம் தருகின்ற பதில், “இவ்வளவு பேரும் தமிழ்நாட்டு மக்கள், தமிழர்கள்" என்று சொல்லுகிறோம்.

கூட்டமாக இருக்கும் போது நாம் தமிழர்களாக இருக்கிறோம். இந்த மணவிழா நிறைவுற்று இங்கிருந்து கலைந்து, அண்ணா அறிவாலயத்திலிருந்து நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது இந்த வாசலை கடந்தவுடனேயே, “நாமெல்லோரும் தமிழர்கள்" என்று இங்கே மொத்தமாகக் குறிப்பிட்ட அந்த குறியீடு மறைந்து போய் நாம் செட்டியார், நாம் முதலியார், நாம் தேவர், நாம் ஆதிதிராவிடர் என்கிற இந்த பேதங்கள் நாம் கூட்டமாக இருந்த நேரத்தில் அல்ல, தனித்தனியாக இருந்த நேரத்தில், ஐந்து பேராக, பத்து பேராக ஆகிற நேரத்தில், சிறு சிறு குழுவாக அமைகிற நேரத்தில், சாதியின் பெயரால் அழைக்கப்படுகிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் நாம் இனத்தால் ஒன்றுபட வேண்டும் என்ற எழுச்சி முழுக்கத்தை எழுப்பி, திராவிட இயக்கத்திலே அப்படிப்பட்ட ஒரு புதுமைப் புரட்சியை உருவாக்க ஆண்டாண்டு காலமாக உழைத்து வந்தார்கள். தொடர்ந்து இந்த பணியை நாம் ஆற்றி வருகிறோம்.

முகில் திருமணம் என்று தான் இதை எல்லோரும், இன்றைக்கு அழைத்து கொண்டு இங்கு வந்திருக்கிறோம். முகிலுக்கு (மேகங்களுக்கு) திருமணம் ஆகாதா என்று வானத்தை நாம் இன்றைக்கு அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கின்றோம்.

முகிலுக்கு திருமணம் ஆனால் தான் வானம் கருக்கும். வானம் கருத்தால் தான் மழை பொழியும், மழை பொழிந்தால் தான் தஞ்சை மாவட்டத்தில் இருந்து இங்கே வந்திருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்களுடைய மனம் குளிரும்.

அப்படி முகிலுடைய ஒவ்வொரு அசைவையும் எதிர்பார்த்து இன்னும் வானம் கருக்காதா, இன்னும் மழை பொழியாதா, நேற்றிரவு பெய்த மழையோடு நின்று விட்டதா, என்று ஏக்கப் பெருமூச்சு விடுகின்ற தஞ்சை மாவட்டத்து மக்கள், தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கெல்லாம் ஒரு ஆறுதலாக இப்படி வானத்திலே கூடுகின்ற முகில்களின் காட்சி அமைகிறதோ, அதைப் போல திராவிட இயக்கத்திலே நம்முடைய தம்பி முகிலைப் போன்றவர்களுடைய உழைப்பு எங்களுக்கெல்லாம் ஆறுதலாக எங்களுக்கு உற்சாகமாக அமைகின்றது.

தம்பி சண்முகநாதன் இல்லாத நேரத்தில் எல்லாம், எனக்கு உதவியாக, என்னுடைய எழுத்துப் பணிக்கு உதவியாக தம்பி முகில் இருப்பதை எல்லோரும் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

குறிப்பாக இரண்டு மூன்று படக்கதைகளுக்கு நான் வசனம் எழுத பெரிதும் என்னோடு ஒத்துழைத்து, நான் எழுதிக்கொடுத்ததை, அது கிறுக்கல் எழுத்தாக இருந்தாலும், அது புரியாத எழுத்தாக இருந்தாலும், அல்லது புரிந்து கொள்ள முடியாத அதன் வடிவம் அமைந்திருக்கிற நேரத்திலும், அதை சரி பார்த்து, இப்படித்தான் நான் எழுதியிருக்க முடியும். இப்படித்தான் நான் எண்ணியிருக்க முடியும் என்று தானே சிந்தித்துப் பார்த்து, நான் எப்படி எண்ணினேனோ, அந்த எண்ணத்தை தட்டச்சில் கொண்டு வருகின்ற பெரும் திறமை நம்முடைய முகிலுக்கு அமைந்திருக்கிறது.

அவருடைய ஆற்றலும், அவருடைய அறிவும், இந்த இரண்டிற்கும் அதிகமாக அவர் என்னிடத்தில் காட்டுகின்ற அன்பும், இந்த இயக்கத்திலே கொண்டிருக்கின்ற பற்றும் அவருடைய குடும்பத்தை மேலும் மேலும் செழிக்க வைக்கும் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+