For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை - நாளை இரவு முதல் கன மழை பெய்யலாம்

Google Oneindia Tamil News

சென்னை: வட கிழக்குப் பருவ மழை தொடங்கியும் பலத்த மழை இதுவரை பெய்யாததற்குக் காரணம், காற்றழுத்த மேலடுக்கு உருவாகாததே காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாளை இரவு முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் வட கிழக்குப் பருவ காலம் நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டாப் பகுதிகள், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இருப்பினும் பலத்த மழை இதுவரை எங்குமே பெய்யவில்லை. இந்த ஆண்டு பருவ மழை தொடங்கிய போதும் காற்றழுத்த மேல் அடுக்குகள் உருவாகவில்லை. இதனால்தான் பெரிய அளவில் மழை இல்லை.

காற்று பலமாக அடித்தால் பெரும் மழைக்கு வாய்ப்புண்டு என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அழர் கூறுகையில்,

தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக அந்த காற்றழுத்தம் எந்த திசை நோக்கியும் நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக செவ்வாய் காலை முதல் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதை கணினி காட்டுகிறது.

உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பரவலாக லேசான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் இடி அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.

தமிழக தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைய வாய்ப்பு இல்லை. ஆனாலும் நாளை இரவு முதல் மழை அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று கம்ப்யூட்டர் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நிஷா புயல் வந்ததால் பெரும் மழை வந்தது. அதேபோல, புயல் சின்னம் உருவானால் சராசரி மழைக்கு மேல் கிடைத்து விடும். டிசம்பர் மாதம் 27-ந்தேதி வரை பருவ மழை காலம் உள்ளது. அதனால் மழை பலத்த பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

சென்னையில் காலையில் லேசான வெயில் அடித்து வந்தது. பிற்பகலுக்கு மேல் வானம் இருண்டு காணப்படுகிறது. காற்றும் இதமாக வீசுகிறது. ஆனால் மழை பெரிய அளவில் இல்லை.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக செய்யூர், பரங்கிப்பேட்டையில் தலா 4 செ.மீ. மழை பெய்திருந்தது.

மழை, மின்னலுக்கு 3 பேர் பலி:

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. புதுச்சேரியில் நல்ல மழை பெய்தது. மழை மற்றும் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

டெல்டா மாவட்டங்கள்...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தஞ்சையில் நேற்று மாலை லேசான மழை பெய்யது. கடலூரில் பிற்பகலில் மழை பெய்தது. கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள எண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (59) என்ற விவசாயி நேற்று பிற்பகல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி பலி ஆனார்.

இதேபோல், மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் வசவன்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வடிவு (22) என்பவர் பலி ஆனார்.

புதுவையில் இடியுடன் பலத்த மழை...

புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை கொட்டியது.

புதுச்சேரி வில்லியனூர் அருகே மங்கலம் ஏரிக்கரை வீதியில் குமாரவேலு (23) என்ற கூலித் தொழிலாளியின் வீடு உள்ளது. இவரது வீட்டின் மீதும், அருகில் உள்ள பனை மரத்தின் மீதும் மின்னல் தாக்கியது.

இதில் வீட்டின் முன்பக்க அறையில் தூங்கிக் கொண்டிருந்த குமாரவேலு உடல் கருகி பரிதாபமாக இறந்தார். உள் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தாயார் செல்வி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தொடர் மழையின் காரணமாக புதுச்சேரியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 16.2 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

குற்றாலத்தில் அருவிகள் ஜோர்...

குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். நேற்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X