புதிய அணை கட்ட தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை: கருணாநிதி விளக்கம்
சென்னை: 1979ம் ஆண்டு மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்ததையின்போது புதிதாக மாற்று அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டது என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தமிழக அதிகாரிகள் செயல்படுவதற்கு கேரள அரசு அதிகாரிகள் அடிக்கடி இடைஞ்சல் ஏற்படுத்துவதால், அப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று, தமிழக அரசின் சார்பில் பிரதமருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு எதிராக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கண்டனம் தெரிவித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
கேரள முதல்வர் கூறும்போது, அணை கட்டப்பட்டு நூறாண்டு காலத்திற்கு மேலாகி விட்டதால், அணைக்கு ஆபத்து, ஐந்து மாவட்ட மக்களின் உயிருக்கு ஆபத்து, அப்படி ஆபத்து ஏற்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து விடுவார்களா என்று கேட்டிருக்கிறார்.
உலக அளவில் இதுபோன்ற அணைகள் கட்டப்படும்போது, அந்த அணையின் உறுதித் தன்மை நூறாண்டு காலத்திற்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கட்ட மாட்டார்கள். அணை கட்டப்பட்டு தகுந்த பராமரிப்பு செய்து வந்தால் பல நூற்றாண்டுகள் அந்த அணை பாதுகாப்பாக இருக்கும். எனவேதான் இந்த அணை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் முல்லைப் பெரியாறு அணை வெறும் சுண்ணாம்புக் கலவையினால் கட்டப்பட்ட ஒன்று என்று கேரள அரசினர் சொல்கிறார்கள். அந்த அணையின் அஸ்திவாரம் வலுவான பாறையின் மீது, மிக வலுவான கலவையினைக் கொண்டு கட்டப்பட்டதாகவும், அதன் உறுதிக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பதுதான் பொறியாளர்களின் கருத்து.
அது மாத்திரமல்ல, 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு இல்லத்தில் அன்றைய மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் நானும், கேரள முதல்வர் அச்சுதானந்தனும் பேசினோம்.
கேரள அரசின் தரப்பில் பேசும்போது, அணையில் அதிகமாக நீர்க் கசிவு உள்ளது என்றும், அதனால் அணைக்கு ஆபத்து வரலாம் என்றும் சொன்னார்கள்.
அப்போது நான், 'ஒரு அணையில் அதிகமாக நீர்க் கசிவு இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்' ஆனால் எங்கள் தரப்பில் அணையில் நீர்க் கசிவு அதிகமாக இல்லை என்கிறார்கள். உங்கள் தரப்பில் நீர்க்கசிவு அதிகம் என்று சொல்வதால், இரு தரப்பினருக்கும் பொதுவாக மத்திய அரசே, இரு மாநிலத்தையும் சேராத பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு, மத்திய நீர்வள ஆணையத்தின் மூலமாக அணையில் எந்த அளவிற்கு நீர்க்கசிவு இருக்கிறது என்பதை கணக்கெடுத்துக் கூறட்டும் என்று நான் சொன்னேன்.
அதற்கு கேரள முதல்வர் உடனடியாகப் பதில் கூறவில்லை. எனது யோசனை பற்றிப் பரிசீலிப்பதாகவும், அதிகாரிகளை கலந்துகொண்டு முடிவினை தெரிவிப்பதாகவும் தான் அப்போது கூறினார்.
நில நடுக்கம் வந்தால் அணை பாதிக்கப்படும், உடைந்து விடும் என்று ஒரு கருத்தை கேரள முதல்வர் நேற்று சொல்லியிருக்கிறார். நில நடுக்கம் ஏற்பட்டால் அதையும் தாங்கக்கூடிய அளவிற்கு முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் மக்களை பீதிக்கு உள்ளாக்கி அதன் வாயிலாக அரசியல் ஆதாயம் தேட அவர்கள் முயலுகிறார்கள் என்பதுதான் உண்மை.
மேலும் கேரள முதல்வர் நேற்று கூறியபோது, 1979ம் ஆண்டில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது புதிதாக மாற்று அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டது என்ற ஒரு தவறான தகவலையும் சொல்லியிருக்கிறார்.
1979ல் திடீரென்று ஒரு சில கேரள பத்திரிகைகளில் பெரியாறு அணையின் உறுதித் தன்மையைப் பற்றி செய்திகள் வந்தன. இந்த செய்திகள் வந்தவுடன், அணையை நேரடியாகப் பார்வையிட்டு, மேலும் அதனைப் பலப்படுத்த வேண்டுமா என்று மத்திய நீர்வளக் குழுமத்தை 31.10.1979 அன்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
அப்போது தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார். மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.சி.தாமஸ் இருந்தார். இங்கே பொதுப்பணித் துறை செயலாளராக விஜயராகவன் ஐஏஎஸ் இருந்தார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, 23.11.1979 அன்று மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர் கே.சி.தாமஸ், இரண்டு மாநில பொறியாளர்களுடன் அணையைப் பார்வையிட்டு விட்டு, அணைக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை, வலுவாக உள்ளது என்று கூறிவிட்டு, அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று விட்டார்.
25.11.1979 அன்று திருவனந்தபுரத்தில் ஒரு கூட்டம். அதில் மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர் கே.சி.தாமஸ் மற்றும் இரண்டு மாநில அதிகாரிகளும், பொறியாளர்களும் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்தில் மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர் அணைக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று அறிவித்த போதிலும், சில நிபந்தனைகளை அங்கே தெரிவித்தார்.
அணையைப் பலப்படுத்துகின்ற பணிகளை மூன்று கட்டங்களாக - உடனடி அவசரப் பணிகள், இடைக்காலப் பணிகள், நீண்ட காலப் பணிகள் என்ற அடிப்படையில் செய்ய வேண்டும், அதுவரையில் அணையில் 152 அடி தண்ணீரை நிறுத்தக் கூடாது, 136 அடி தான் நிறுத்த வேண்டும், முதல் இரண்டு கட்டப் பணிகளை முடித்த பிறகு 145 அடி வரை தண்ணீரை நிறுத்தலாம், நீண்ட கால பராமரிப்பு பணியான மூன்றாவது கட்டத்தை முடித்த பிறகு 152 அடி வரை தண்ணீரை நிறுத்தலாம் என்று மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர் கே.சி.தாமஸ் அறிவித்து விட்டார்.
இந்த கூட்டத்தில் தான் நீண்டகால திட்டத்தில் தற்போதுள்ள அணையைப் பலப்படுத்தலாமா அல்லது புதிய அணை ஒன்றைக் கட்டலாமா என்று மத்திய நீர்வளக் குழுமம் யோசனை தெரிவித்தது. அதன் அடிப்படையில் பெரியாறு அணைக்கு பக்கத்தில் புதிய அணையைக் கட்ட இடம் தேடுவது சாத்தியமானது தானா என்று 2.12.1979 அன்று இரு மாநிலப் பொறியாளர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
புதிய அணை கட்டுவதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்வதற்கு மேலும் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென்று முடிவானது. ஆனால் பின்னர் அணை கட்டுவதற்கு சரியான இடம் இல்லாததாலும், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாவதாலும் புதிய அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய நீர்வளக் குழுமத்தின் 24.3.1986 தேதியிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பேரில் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் பணிகளை விரைவாக செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து, புதிய அணை கட்டும் யோசனை கைவிடப்பட்டது.
அணையைப் பலப்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தவரை டெல்லியில் மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர் 29.4.1980 அன்று இரண்டு மாநிலப் பொறியாளர்களையும் அழைத்துப் பேசி, தற்போதுள்ள அணையைப் பலப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான பரிசீலனை செய்தார்.
பின்னர் அணையைப் பலப்படுத்தும் முதல் இரண்டு கட்டப் பணிகள் முடிந்ததும், 145 அடி வரை தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று மத்திய நீர்வளக் குழுமத் தலைவர் அறிவித்தார். 6.8.1980 அன்று கேரள அரசு தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகும் நீர்மட்ட அளவை 136 அடி வரை என்றே வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.
இந்த கருத்தை தமிழக அரசு ஏற்க மறுத்து, தற்காலிகமாகத் தான் அணையைப் பலப்படுத்தும் பணி முடிகின்றவரை 136 அடி வரை நீர்மட்டம் இருப்பதற்கு ஒப்புக்கொண்டோம். அணையை பலப்படுத்தும் பணி முடிந்ததும், நீர் மட்டத்தின் அளவு 152 அடி என்று உயர்த்திக்கொள்ளப்படும் என்று கடிதத்தின் மூலம் பதில் அனுப்பியது.
16.6.1983 அன்று டெல்லியில் மத்திய நீர்வளக் குழுமத் தலைவர் இரண்டு மாநில பொறியாளர்களையும் அழைத்து அணையைப் பலப்படுத்தும் பணிகளைப் பற்றி மீண்டும் ஆய்வு நடத்தினார். 16.8.1983 அன்று தேடிக்கடியில், இரண்டு மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டு அணையைப் பலப்படுத்தும் பணி குறித்து ஆய்வு செய்தனர்.
24.3.1986 அன்று மத்திய நீர்வளக் குழுமம் தயாரித்த குறிப்பில், அணை பலப்படுத்தப்பட்டு விட்டால் நீர் மட்டத்தின் அளவை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த குறிப்பில் புதிய அணை கட்டுவது பற்றிய யோசனை தொடரப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த விவரங்களிலிருந்து, 1979ம் ஆண்டு மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது புதிதாக மாற்று அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டது என்று நேற்றைய தினம் கேரள மாநில முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
1979ம் ஆண்டு தமிழக அரசு மாற்று அணை கட்டுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், அதற்கு பிறகு, தற்போதுள்ள அணையைப் பலப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து இவ்வளவு நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டிய அவசியமோ, மத்திய அரசு அவ்வப்போது இதனை ஆய்வு செய்திட வேண்டிய நிலையோ ஏற்பட்டிருக்காது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications