நெல்லை: மழை-வெள்ள கண்காணிப்பு பணியில் 11 துணை கலெக்டர்கள்
நெல்லை நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ள நிவாரண துயர் துடைப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் 11 துணை கலெக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் குளங்கள், அணைகள் நிரம்பி வழிகின்றன. பாலங்களை மூழ்கடித்து கொண்டு வெள்ள நீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தின் 11 தாலுக்காக்களிலும், தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து அதிகாரிகளும் தலைமையிடத்தில் தங்கியிருக்குமாறும், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், மழை, வெள்ள நிவாரணம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார்.
ஓவ்வொரு தாலுகாவிலும் மழை, வெள்ள நிவாரண பணிகளை கண்காணிக்கவும், சேதம் குறித்து கணக்கெடுக்கவும், கண்காணிப்பு அலுவலர்களாக 11 துணை கலெக்டர்களை நியமனம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விபரம் -
1. நெல்லை-கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)
2. பாளையங்கோட்டை-தமிழ்செல்வி, நெல்லை ஆர்டிஓ
3. சங்கரன்கோவில்-அருமைநாயகம் வரகுணராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
4. தென்காசி-மூர்த்தி, தென்காசி ஆர்டிஓ
5. செங்கோட்டை-ராதாகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்)
6. ஆலங்குளம்-சேதுராஜன், துணை கலெக்டர், கலர் டிவி
7. விகேபுரம்-ரவிசந்திரன், துணை கலெக்டர், சுனாமி பிரிவு
8. சிவகிரி-சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர்
9. அம்பாசமுத்திரம்-வீரராகவ ராவ், சேரன்மகாதேவி சப் கலெக்டர்
10. ராதாபுரம்-நில சீர்திருத்த ஆணையர், நெல்லை
11. நாங்குநேரி-தவமணி, முத்திரை பிரிவு தனித்துணை கலெக்டர்
கீழப்பாவூரில் அரிசி ஆலைகள் முடக்கம்
தொடர்மழையால் கீழப்பாவூர் பகுதியில் அரிசி ஆலைகள் முடங்கி போய் உள்ளன. ஆலைக்கு வந்த நெல் மணிகள் முளைத்து நாற்றுகளாக மாறி விட்டன.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஓன்றியம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட நவின அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. நெல்லை மட்டுமல்லாது தஞ்சை, கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இங்குள்ள ஆலைகளில் அரிசியாக மாற்றம் செய்து தமிழகத்தின் பல ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த 5 தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் கீழப்பாவூர் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் பணிகள் முடங்கியுள்ளன. அரவைக்காக மூட்டை, மூட்டையாக வந்துள்ள பச்சை நெல்மணிகள் முளை விட்டு நாற்றுகளாக மாறி விட்டன.
புழுங்கல் நெல்மணிகள் வெடித்து நாசமாகி விட்டது. ஆலைகளில் அரைப்பணி நடக்காததால் ஊழியர்களும் வேலை இழந்து தவிப்பதுடன் ஆலை உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications