பொன்சேகாவுக்கு இலங்கை தமிழர் கட்சி ஆதரவு!
கொழும்பு: மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி பொன்சேகாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அறிவித்துள்ளது.
தற்போது மனோ கணேசன் கட்சி ரணில் தலைமையிலான 18 கட்சி எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் பொன்சேகாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை கணேசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்படவிருக்கும் சரத் பொன்சேகாவிற்கு எதிர்வரும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
பொன்சாகாவிற்கு எந்தவித அரசியல் நிபந்தனைகளுமின்றி வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்களை நாங்கள் கோரவில்லை. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன்றைய ஆட்சியை மாற்றும் வாக்குகளாகும்.
போர் வெற்றியினை முன்னிலைபடுத்தி தேர்தல்களில் இலகு வெற்றி பெற்றிடலாம் என இந்த அரசாங்கம் மனப்பால் குடித்தது. ஆனால் யுத்த வெற்றிக்கு காரணமானவரே தேர்தலில் பொது வேட்பாளராக எதிரணியினால் நிறுத்தப்படுவதால் இன்று இந்த அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு இதைவிட சிறந்த வழி எதுவும் கிடையாது.
இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் நமது செயற்திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழர் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.
இன்றைய அரசாங்கத்தை மாற்றிட வேண்டும் என்ற உணர்வுகள் இன்று வடகிழக்கில் தமிழ் மக்கள் மனங்களில் ஒலிப்பதாக எங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
அந்த உணர்வுகளை எதிரொலித்து ஆட்சிமாற்றம் என்ற ஒரே அடிப்படையில் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
தென்னிலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருகும் தமிழ் மக்கள் மத்தியிலே இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற உணர்வு கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது.
எவர் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம். எனவே நமது மக்களின் எண்ணக் கருத்திற்கு ஏற்ப மலையக கட்சிகள் செயற்பட வேண்டும். ஆட்சி மாற்றத்திற்காக மலையக கட்சிகள் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இந்நாட்டிலே இனியொரு ஆயுத போருக்கு இடம் கிடையாது. போர் முடிந்துவிட்டது. ஆனால் போராட்டம் முடியவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தின் வடிவம் மாற வேண்டும். அது ஜனநாயக போராட்டமாக இருக்க வேண்டும்.
அதிகார பகிர்விற்காகவும், நீதி, சமாதானம் ஆகிய நோக்கங்களுக்காகவும் அரசியல் முதிர்ச்சியுடனான சாணக்கியத்துடன் நாம் காய் நகர்த்த வேண்டும். நமது போராட்டத்தை சிங்கள அரசியல் அணிகளுடன் இணைந்து நடத்தும் சந்தர்ப்பங்களை நாம் ஒருபோதும் தவறவிடக் கூடாது.
இலங்கையிலே ஆட்சி மாற்றத்திற்கும், தமிழர்களின் போராட்ட வடிவத்தின் ஜனநாயக மாற்றத்திற்கும் புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும். களத்தில் இருந்தபடி நேரடியாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ் தலைமைகளை அடையாளங்கண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
பல்லாண்டுகளாக நமது மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து நிற்கும்பொழுது நாம் நமது மக்களுடன் இருந்து கொண்டிருக்கின்றோம். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் எமது கடமையை உறுதியுடன் செய்து வந்துள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பேரினவாதிகளுக்கு துணைபோனது கிடையாது.
நமது ஜனநாயக மக்கள் முன்னணி தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ் மக்களை நாடிவரும் கட்சியல்ல என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே தமிழ் மக்களுக்கு வழிகாட்டுவதற்கும், கோரிக்கை விடுப்பதற்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு முழுமையான தார்மீக உரிமை இருக்கின்றதாக நாங்கள் நம்புகின்றோம்.
தமிழ் மக்களிடம் தமது சொந்த விருப்பத்தின்படி வாக்களியுங்கள் எனக்கூறிவிட்டு எமது கடமையில் இருந்து நாம் நழுவ முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் மக்களுக்கு தலைமைத்துவம் வழங்கி வழிகாட்டவேண்டிய வரலாற்று கடமையை நாம் நிறைவேற்றுவோம். ஏனைய தமிழ் கட்சிகளும் மக்களுக்கு தெளிவாக வழிகாட்ட வேண்டும் என கோருகின்றோம்.
கடந்த பல வருடங்களாக தமிழ் மக்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலமாகவும், ஆயுத போராட்டத்தின் மூலமாகவும் உலகத்திற்கு தமது விருப்பங்களை மீண்டும் மீண்டும் எடுத்து கூறியிக்கின்றார்கள்.
மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிலிருந்து, சிங்களம் மட்டும் சட்டம், தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் உள்ளிட்டு நடந்து முடிந்த போரின் இறுதிக் காலக்கட்டங்களில் நமது மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டது வரை அனைத்தையும் இந்த உலக சமூதாயம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது.
சர்வதேச சமூகமும், குறிப்பாக இந்திய அரசாங்கமும் எதுவும் தெரியாத அப்பாவிகள் என எவரும் சொல்ல முடியாது. தமிழ் மக்களின் மீதான கொடுமைகளுக்கு சர்வதேச சமூகம் மிகப்பெரும் பதிலை வரலாற்றுக்கு சொல்லியே ஆகவேண்டும்.
எமது மக்கள் குறித்து இந்தியா உட்பட சர்வதேச சமூகம் தனது கடமையை சரியாக செய்யவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே நமது ஜனநாயக செயற்பாட்டிற்கு இந்தியாவும், சர்வதேச சமூகமும் துணை வருவதை வரவேற்போம்.
ஆனால் நமது எதிர்காலத்தை முழுமையாக சர்வதேச சமூகத்திடம் மாத்திரம் ஒப்படைத்துவிட்டு நாம் எதிர்பார்த்து காத்திருக்க முடியாது. உலக சமூதாயத்திற்கு எடுத்து கூறுகின்றோம் என்று சொல்லி நமக்குரிய சந்தர்ப்பங்களை நாம் கைநழுவி விட முடியாது.
இன்றைய அரசாங்கத்திற்கு வாக்களிப்பதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவொரு காரணமும் கிடையாது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களிடம் தோல்வியடைந்து விட்டது.
சொல்லொணா துன்பங்களை விளைவித்த யுத்தத்திற்கு இந்த அரசாங்கம் அரசியல்-ராணுவ தலைமையை தந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்று சொல்லி தாங்களே ஆரம்பித்து வைத்த சர்வகட்சி கடையை இந்த அரசாங்கமே இழுத்து மூடிவிட்டது.
இன்று இந்த யுத்தத்தையடுத்து தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தையும் இந்த அரசாங்கம் தவறவிட்டு விட்டது.
தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இன்று இந்த அரசாங்கத்திற்குள்ளேயே தமிழ் கட்சிகளுக்கும், சிங்கள தீவிரவாத கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றியுள்ளன.
இந்தியாவிடம் ஒன்றும், ஏனைய சர்வதேச சமூகத்திடம் ஒன்றும், சிங்கள மக்களிடம் ஒன்றும், தமிழ் மக்களிடம் ஒன்றும் என மாற்றி, மாற்றி பேசி தமிழ் மக்களின் வாழ்க்கையையும், மண்ணையும் அபகரிக்கும் நோக்கம் இந்த அரசாங்கத்தின் அடிப்படை வேலைத்திட்டமாகும்.
இன்று எதையாவது சொல்லி தமிழ் மக்களின் வாக்குகளையும் வாங்கி ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதே இவர்களது நோக்கம்.
இவர்களது ஆட்சி தொடருமானால் பல இனங்களுக்கும், பல மதத்தவர்களுக்கும் சொந்தமான நமது நாடான இலங்கை ஒரே இனத்திற்கும், ஒரே மதத்தவருக்கும் மாத்திரமே சொந்தமான நாடாக விரைவில் மாற்றப்படும். இது ஒன்றே இந்த அரசாங்கத்தின் ஒரேயொரு அரசியல் திட்டமாகும்.
பொன்சேகாவிற்கு வாக்களிப்பதானது நமது வரலாற்று கடமையல்ல. அது நாம் வாழுகின்ற காலத்தின் கட்டாயமாகும். பொன்சேகா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு அணியிடமும் உறுதியளித்துள்ளார்.
கடந்த கால ஜனாதிபதிகளின் இத்தகைய உறுதிமொழிகளுக்கும், தற்போதை நடைமுறைக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடுகள் சிந்திப்பவர்களுக்கு புரியும். கடந்த காலங்களில் ஜே.வி.பி. மட்டும்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்த்தது.
இன்று ஏறக்குறைய எல்லா கட்சிகளும் இதை எதிர்க்கின்றன. பொன்சேகா பாரம்பரிய அரசியல்வாதியல்ல. அவருக்கு அரசியல் கட்சி கிடையாது. அவர் ராணுவ வீரராக இருந்துள்ளார்.
தமிழ் மக்களை பொறுத்தவரையிலே ராணுவ ஆட்சி என்பது புதிய ஒரு அனுபவமல்ல. ஆனால் அது சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு புதிய விஷயமாகும். எனவே ராணுவ ஆட்சி ஏற்படும் சாத்தியம் கிடையாது. இது அரசாங்கத்தின் கட்டுக்கதையாகும்.
பொன்சேகா 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என பகிரங்கமாக கூறியிருப்பது நல்ல விஷயம். இதைக் கூட இதுவரையில் ஆளுங்கட்சியின் வேட்பாளர் கூறவில்லை.
இனப்பிரச்சனை தீர்வை பொன்சேகாவிடம் நாம் விட்டுவிடப் போவதில்லை. அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் உருவாகும் தேசிய அரசாங்கத்தின் முதற்கடமை தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாகும்.
இந்த விவகாரங்கள் குறித்து நான் நேரடியாக பங்கேற்றுக் கண்காணிப்பேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மனோ கணேசன்.
இதற்கிடையே, ராஜபக்சேவுக்கு சிலோன் தொழிலாளர்கள் காங்கிரஸ், தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பான பிளாட், பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியான ஈபிடிபி ஆகிய நான்கு தமிழர் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications