Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாபர் மசூதி இடிப்பு தினம்- தமிழக பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு, ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னை நகருக்குள் 7 தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் வருகிற 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளையொட்டி லஷ்கர் உள்ளிட்ட தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை ஏற்கனவே உஷார்படுத்தியுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வழக்கமாக செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தான் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளிடமிருந்து குறிப்பாக அச்சுறுத்தல் வராவிட்டாலும் கூட, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

தமிழகத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்துக்கு முன்தின நாளும், பாபர் மசூதி இடிப்பு தினத்தன்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்துக்கு அடுத்த நாளும் மொத்தம் 3 நாட்கள் போலீசாரை உஷார்நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 3 நாட்களிலும் போலீசார் யாருக்கும் விடுமுறை கிடையாது. அனைத்து போலீசாரும் பணியில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தமிழ்நாடு விசேஷ போலீஸ் படையினர், அதிரடி படையினர், அதிவிரைவு படையினர், கமாண்டோ படையினர் முக்கியமான இடங்களில் துப்பாக்கியோடு நிறுத்தப்படுவார்கள். கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாதுகாப்பு பலமாக இருக்கும்.

அனைத்து விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும், பொதுமக்கள் கூடும் மார்க்கெட், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், முக்கியமான அரசு அலுவலகங்கள், எல்.ஐ.சி. போன்ற சரித்திர புகழ்வாய்ந்த கட்டிடங்கள் போன்றவற்றிலும் பாதுகாப்பு பலமாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். கடற்படையினர், கடலோர பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

இடைத்தேர்தல் நடைபெறும் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும். அங்கு நடைபெறும் பிரசார கூட்டங்களிலும் பாதுகாப்பு பலமாக இருக்கும். மொத்தத்தில் 3 நாட்கள் விழிப்போடு இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

சென்னையில் தீவிரவாதிகள் ஊடுறுவலா...?

பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய 7 தீவிரவாதிகளால் சென்னை நகருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ஏற்கனவே தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள அண்ணா மேம்பாலம், அமெரிக்க தூதரகம், சென்னை கோட்டை, எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்கள் போன்ற 14 இடங்கள் தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 3 நாட்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. முக்கியமான தெருக்களிலும், ரோடுகளிலும் சோதனைசாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கியமான ரோடு சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஸ்நிலையங்கள், ரயில் ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் முன்பு வெடிகுண்டு கண்டுபிடிப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமாக பொருட்கள் கிடந்தாலோ, சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ பொதுமக்கள் உடனடியாக 9500099100 என்ற செல்போன் நம்பரில் போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி:

இதற்கிடையே, சென்னை நகரில் டிசம்பர் 6ம் தேதியன்று ஆறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு 17வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை நகரில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், பேரணி, ஊர்வலம், மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அவர்களுக்கு போலீஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகம் அருகில் இஸ்லாமிய ஜனநாயக கட்சி சார்பிலும்,

மாலை 3 மணியளவில் அதே கலெக்டர் அலுவலகம் அருகில் அனைத்திந்திய இமாம் பேரவை சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பகல் 12 மணிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை அந்த அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த உள்ளனர்.

மாலை 4 மணியளவில் தமிழ்நாடு தவுஹித் ஜமாத் சார்பில் மன்றோ சிலை அருகில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே மாலை 4 மணியளவில் மெமோரியல் அரங்கம் அருகில் சுன்னத் ஜமாத் அமைப்பு சார்பில் மனித சங்கிலியும் நடத்த உள்ளனர்.

இவை தவிர காவல்துறை அனுமதி இல்லாமல் யாராவது போராட்டங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+