இலங்கைக்கு எம்பிக்கள் குழு அனுப்ப இந்தியா திட்டம்

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்தார்.
இலங்கை நிலை தான் இந்திய நிலையா?-திமுக:
அப்போது பேசிய திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், அமைச்சர் கிருஷ்ணாவின் அறிக்கை இலங்கை அரசின் நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது என்றார்.
மதிமுக எம்பி கணேசமூர்த்தி பேசுகையில், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து அமைச்சரின் அறிக்கையில் எதுவுமே இல்லை என்றார்.
இதற்கு பதிலளித்து கிருஷ்ணா பேசுகையில்,
இலங்கை அரசு இப்போது கவனம் செலுத்தவேண்டியது தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது, அவர்கள் இயல்பு வாழ்க்கை தொடங்க நிவாரண உதவி அளிப்பது,
சமரசப் பேச்சு நடத்துவது ஆகியவை மீதுதான். இந்த முயற்சிக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்.
விடுததலை ப்புலிகளை ஒழிக்க இலங்கை ராணுவம் எடுத்த நடவடிக்கையின்போது இலங்கையின் வடபகுதியில் வசித்த 3 லட்சம் தமிழர்கள் அரசு அமைத்த முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்த முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்று புகார் எழுந்தது.
இதையடுத்து தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சியால் தமிழகத்திலிருந்து எம்பிக்கள் குழு அக்டோபரில் இலங்கை சென்று முகாம்களை பார்வையிட்டது. தமிழர்களை விரைவாக சொந்த வீடுகளுக்கு அனுப்பும்படி அந்த குழு கோரிக்கை விடுத்தது.
இதன்பலனாக தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களில் 6 மாதங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கை அறிவித்தது. சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை
தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். வரும் ஜனவரிக்குள் அனைத்து தமிழர்களும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை உறுதி அளித்துள்ளது.
ஆனால் 6 மாதத்தில் முடியக்கூடிய பணியாக இது தெரியவில்லை. நீண்டகாலத்துக்கு தமிழர்கள் முகாம்களில் அடைபட்டு கிடப்பதை இந்தியா ஏற்காது.
தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக அதிபர் மகிந்த ராஜபட்சவுடன் அண்மையில் இலங்கை சென்ற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார்.
இலங்கைப் பிரச்சனையை தமிழர் பிரச்சனையாக குறுக்கிக்கொண்டு அணுகவில்லை. தேசிய பிரச்சனையாக அணுகுகிறோம். அதனால்தான் தமிழர் பிரச்சனை என்றோ அல்லது மாநிலப் பிரச்சனை என்றோ தடாலடியாக பிரச்சனையை அணுகாமல் தேசிய கண்ணோட்டத்தில் பிரச்சனை அணுகப்படுகிறது.
கூடுதல் நிதி அளிக்க தயார்:
தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வகைசெய்யும் திட்டத்தை அமல்படுத்தும்படி இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த இன்னும் கூடுதல் நிதி உதவி செய்யவும் இந்தியா தயாராக உள்ளது. ஏற்கெனவே இந்தப் பணிக்காக இந்தியா ரூ. 500 கோடி ஒதுக்கியது.
இலங்கை சென்ற தமிழக எம்பிக்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மேலும் 3 குழுக்களை இந்தியா அனுப்பவுள்ளது.
அதே போல தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த இலங்கைக்கு எம்பிக்கள் அடங்கிய மற்றொரு குழுவை அனுப்புவது பற்றி அரசு பரிசீலிக்கும் என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications