இடைத்தேர்தல்: திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம்-பாஜக
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக பாஜகவினர் வாக்களிப்பார்கள் என்று அக் கட்சியின் தலைவர் இல.கணேசன் கூறினார்.
இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு ஓய்வில் இருந்து வந்த இல.கணேசன் நீண்ட நாட்களுக்கு பின் கட்சி அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர்,
ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் உருவாகுவதற்கு பாஜக ஆதரவு அளிக்கிறது. இந்த கோரிக்கையை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இது போன்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இது பற்றி நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது என்று சொல்வது தேவையற்றது.
இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் எங்கள் கட்சியினர் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.
மக்களிடம் மார்க் பெற முடியவில்லை என்பதால் திமுகவினர் பணம் கொடுக்கிறார்கள். இந்த தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்றார் கணேசன்.
தெலுங்கானா: நிதானம் தேவை-சரத்
இந் நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை போராட்டமாக வெடித்ததை அடுத்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க ஆலோசித்து வருகிறது.
தனி நபர்களோ சாதி அமைப்புகளோ தனி மாநில கோரிக்கைக்காக போராட்டங்களில் ஈடுபடுவதை ஒடுக்க முடியாமல் மாநில பிரிப்பு கோரிக்கையை பரிசீலனை செய்வது நல்லதல்ல.
மத்திய அரசின் இந்த முடிவால் பல மாநிலங்களிலும் இந்த கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் பொருளாதார தேக்கநிலை இருந்தும், நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுமேயானால், அந்நிய முதலீடுகள் பாதிக்கப்பட்டு நமது வளர்ச்சிக்கு தடைக்கற்களாக அமைந்துவிடும்.
எனவே தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதில் ஆந்திர மாநில மக்களின் கருத்தையும், உணர்வையும் மட்டுமே குறிந்து, தனிநபர் போராட்டங்களுக்கு பணிந்து விடாமல், மத்திய அரசு அவசர முடிவு எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications